(எம்.மனோசித்ரா)

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் தீபிகா உடகமவுக்கு எதிரான விமர்சனங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்திற்கும் இது தொடர்பிலான அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு பிரிவின் பதில் ஆணையாளர் நிஹால் சந்ரசிறி தெரிவித்தார். 

பிரதமர் அலுவலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுமை தொடர்பில் அவர் தெளிவுபடுத்துகையில், 

மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவர் இவ்வாறான விமர்சனங்கள் விடுக்கப்பட்டுள்ளமை கண்டிக்கத்தக்கதும், பாரதூரமானதுமான ஒரு விடயமாகும். எனவே இவ்வாறான சம்பவங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். இதே வேளை பாதுகாப்பும் உறுத்திப்படுத்த வேண்டும்.

இலங்கையின் அரசியலமைப்பிற்கு அமையவே இவ் ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளது. அதே வேளை இது சுயாதீனமாக செயற்படும் ஒரு நிறுவனமுமாகும். இந் நிலையில் இவ்வாறான ஆணைக்குழுவின் தலைவரை வெளிப்படையாக அச்சுறுத்தும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளமை ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. 

எனவே ஆணைக்குழுவின் தலைவர் ஏனைய ஆணையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இது தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.