யுத்தத்தின் பின்னரான சூழலில் பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல் என்ற தலைப்பிலான சர்வதேச பெண்கள் மகாநாடு நாளை 21 ஆம் திகதியும் நாளை மறுதினம் 22 திகதியும் யாழ்ப்பாண பொது நூலகத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ந்து இரண்டு தினங்கள் நடைபெறுகிறது. 

இந்த நிகழ்வின் பெண்கள் தொடர்பான ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படுவதோடு எதிர்காலத்தில் பெண்கள் தொடர்பான அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும் கொள்கை வகுப்பிற்கான முன்மொழிவுகளும் முன்வைக்கப்படவுள்ளன.

யாழ். மாவட்ட அரசசார்பற்ற நிறுனங்களின் இணையம் இந்த ஆய்வு மகாநாட்டை ஒழுங்கு செய்து நடத்துகிறது. முப்பதிற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் பல்வேறு நாடுகளிலுமிருந்து வருகைதந்து தமது ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பிக்கிறார்கள்.

ஆய்வு மகாநாட்டின் ஆய்வுத் தொடக்கவுரை பிரதமமந்திரியின் பாரியார் பேரிசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க நிகழ்த்தவுள்ளார். தொடக்க நிகழ்விற்கு யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ரட்ணம் விக்னேஸ்வரன் அவர்கள் பிரதமவிருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளார். 

நிகழ்விற்கு யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் விசேடவிருந்தினராகவும். தமிழ்நாட்டின் எத்திராஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆர்.மல்லிகா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

ஆய்வு மகாநாட்டின் இறுதிநாள் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் வடக்குமகாண முதலமைச்சர்  சி.வி.விக்னேஸ்வரன் பிரதமவிருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார். கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கலாநிதி சாந்தி கேசவன், மாற்றுத்தினாளி பெண்கள் அமைப்பைச்சார்ந்த வெற்றிச்செல்வி மற்றும் தமிழ்நாட்டின் திறந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆனந்தகிருஸ்ணன் செந்தில்வேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து சிறப்பிக்கிறார்கள். 

உலகெங்கிலும் தமிழர்தொன்மை சார் ஆய்வுகளை மேற்கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவ பாலசுப்பிரமணியம் ( ஒரிசா பாலு )  சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். ஆய்வு மகாநாட்டில் எட்டுத் தலைப்புக்களில் அறுபது ஆய்வுகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. உள்நாட்டிலும், வெளிநாடுகளையும் சேர்ந்த 83 ஆய்வாளர்கள் இதில் பங்குகொள்கிறார்கள். 

பால்நிலை சமத்துவம், பெண்களின் பொருளாதாரம் மற்றும் வலுவூட்டல், பெண்களின் உளசமூக மேம்பாடு, சமூகக்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு, பெண்களும் ஊடகமும், கட்டிளமைப்பருவத்தினரும் மாறிவரும் சூழலும் என்ற தலைப்புக்களில் ஆய்வுகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன. 

மகாநாட்டில் பங்கு கொள்ளவிரும்புபவர்கள் 0212223668 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ளலாம். என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.