சென்னையில் 11 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்பட்ட  வழக்கில் ஊசி மருந்தை விற்பனை செய்ததாக கூறப்படும் கடைக்காரர்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை அயனாவரம் மகளிர் பொலிஸார் விசாரித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குற்றவாளிகள் போதை ஊசி போட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.

போதை ஊசியை பயன்படுத்தவில்லை என்று கைதான குற்றவாளிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் பொலிஸார் விசாரணையில் பிரசவத்தின்போது பெண்களுக்கு ஏற்படும் வலியை குறைப்பதற்காக பயன்படுத்தும் ஊசி மருந்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு செலுத்தியதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள ‘லிப்ட்’ இயக்கும் ஊழியர் ரவிக்குமார் ஆரம்ப காலத்தில் அயனாவரம் பகுதியில் உள்ள மகப்பேறு வைத்தியசாலையில் ஊழியராக பணியாற்றியுள்ளார். அந்த சமயத்தில் பிரசவத்தின்போது பெண்களுக்கு வலி ஏற்படாமல் தடுப்பதற்காக போடப்படும் ஊசி மருந்து பற்றி அவர் தெரிந்து வைத்துள்ளார்.

குறித்த நபர்  பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குறிப்பிட்ட ஊசி மருந்தை போட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஊசி மருந்தை விற்பனை செய்ததாக கூறப்படும் 3 மருந்து கடைக்காரர்களிடமும் விசாரணை நடக்கிறது.

குறித்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 17 குற்றவாளிகளுக்கும் விரைவில் அடையாள அணிவகுப்பு நடைபெற உள்ளது. புழல் மத்திய சிறையில் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் இந்த அடையாள அணிவகுப்பு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளையும் பொலிஸார் செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வைத்திய  உதவிகள் செய்ய வைத்திய குழு அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு வைத்தியசாலையை சேர்ந்த 6 வைத்தியர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் பொது மருத்துவம், உளவியல், இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலம் மற்றும் மகளிர் நோயியல் ஆகிய துறைகளை சேர்ந்த வைத்திய பேராசிரியர்கள் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வைத்திய உதவிகள் வழங்க நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறுமிக்கு வைத்திய உதவிகளை வழங்கும் வைத்தியர்களின் பெயர்களை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர். மேலும் குறித்த  வைத்திய குழுவினர் இன்று முதல் சிறுமிக்கு தேவையான வைத்திய உதவிகள் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.