(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

இந்தியாவுடன் மத்தல விமான நிலையம் தொடர்பாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டுமாயின் விமான சேவை தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இல்லையேல் ஒப்பந்தம் கைச்சாத்திட முடியாது. என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான அநுர குமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்.

மத்தலவிமான நிலையத்தை பொறுப்பேற்கும்போது போது நட்டத்தில் இருந்தது. இதனை பொருளாதார ரீதியாக இலாபம் அடையும் நிலையமாக மாற்ற திட்டமிட்டேன். அபிவிருத்தி செய்வதற்கு வெளிநாட்டு அல்லது உள்நாட்டு நிறுவனங்களுக்கு யோசனை முன்வைக்க கோரினோம். 

குறித்த விடயத்தில் இந்தியா அரசாங்கம் ஆர்வம் செலுத்தியது. கூட்டு பங்காண்மையின் கீழ் விமான நிலையத்தை கட்டியெழுப்ப இந்திய விமான அதிகார சபை முன்வந்தது. ஆகையால் இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கி கடன் சுமையை குறைக்க திட்டமிட்டுள்ளோம். 

மத்தலவிமான நிலையத்தை குத்தகைக்கு  வழங்கும் போது நாம் தேசிய பாதுகாப்பு மற்றும் ஊழியர் உரிமைகளிலும் கவனம் செலுத்தியுள்ளோம். இந்த கொடுக்கல் வாங்கலின் போது எம்மிடம் பல நிபந்ததனைகளும் உள்ளன. அதனை நாம் மாற்ற மாட்டோம். இதன்படி இலாபத்தில் 70 வீதத்தை இந்தியா கட்டாயம் வழங்கியே ஆக வேண்டும். 

அதில் தயவு காட்டமாட்டோம். மேலும் இது வணிக கொடுக்கல் வாங்கல் மாத்திரமேயாகும். எக்காரணம் கொண்டு யுத்த விமானங்கள் தரிப்பதற்கு நாம் இடமளிக்க போவதில்லை. பாதுகாப்பில் எமது விமான படையினரே இருக்க வேண்டும். வெளியில் எவருக்கும் அதிகாரமில்லை. அனர்த்த நடவடிக்கைகளின் போது எமது குழுவினரே தலையீடுவர். ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து அவதானம் செலுத்துவோம். இதுவே எமது நிபந்தனைகளாகும்.. 

கட்டுநாயக்கவின் இலாபத்தை மத்தலவிற்கு செலவிடுகின்றோம். கட்டுநாயக்க வருமானத்தை அதிகரித்துக்கொண்டோம். ஆகவே ஐந்து வருடத்தில் செயற்திறன் மிக்க விமான நிலையமாக மாற்ற வேண்டும் என காத்திரமாக இந்தியாவிடம் கோரியுள்ளோம். அதேபோன்று இதன் வணிக திட்டத்தை ஒப்படைக்குமாறு கோரியுள்ளோம்.  

அத்துடன் இந்த ஒப்பந்ததை கைச்சாத்திட வேண்டுமாயின் விமான சேவையை சட்டத்தை திருத்த வேண்டும். பாராளுமன்றத்தில் நிறைவேற்றினால் கைச்சாத்திட முடியும் . இல்லையேல் முடியாது. எவ்வாறாயினும் ஒப்பந்ததை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம் என்றார்.