சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்காதது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தேவசம் அமைப்பு இன்று விளக்கம் அளித்துள்ளது. 

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 48 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி வரும் ஆண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பெண்களில் 10 வயது முதல் 50 வயதுக்குட்டப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 

ஆனால், வயது வித்தியாசமின்றி 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய குழு விசாரித்து வருகிறது. 

இந்நிலையில் நேற்றைய விசாரணையின்போது, சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடு என கேரள அரசின் சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதன்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஆண்களைப் போல பெண்களுக்கும் வழிபாடு நடத்த உரிமை உள்ளது என்றும் பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் கூறினர். 

இந்த வழக்கு குறித்து  கேரள அறநிலையத்துறை அமைச்சர் சுரேந்திரன், மாநில அரசின் நிலைப்பாட்டிற்கு கேரள தேவசம் அமைப்பு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேவசம் அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்க மறுப்பதற்கான காரணங்களை விளக்கினார்.

‘சபரிமலையில் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்ய பெண்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்களால் 48 நாட்கள் விரதமிருக்க முடியாது என்பதால், அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவல்லை’ என தேவசம் அமைப்பின் வழக்கறிஞர் தெரிவித்தார்.  இதையடுத்து வழக்கு விசாரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.