உடல்ரீதியான வன்முறையை தூண்டக்கூடிய பதிவுகளை அகற்றுவதற்கு பேஸ்புக் தீர்மானித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பகைமையை தூண்டும் கருத்துக்கள் மற்றும் பிழையான தகவல்கள் பரப்பப்படுவதை தடுப்பதற்கான ஒரு முயற்சியாகவே பேஸ்புக் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

2018 ம் ஆண்டு மார்ச் மாதம் கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளிற்கு சமூக ஊடகங்களே காரணம் என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையிலேயே பேஸ் புக் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பகைமையை தூண்டும் கருத்துக்களையும் வெளிப்படையாக மிரட்டல் விடுப்பதையும் மீறல்கள் என ஏற்கனவே வகைப்படுத்தியுள்ள பேஸ்புக் அவற்றை அகற்றி வருகின்றது.

எனினும் பேஸ்புக் தற்போது வன்முறை போன்று தோற்றமளிக்காத ஆனால் வன்முறையை தூண்டக்கூடிய பதிவுகளை அகற்ற தீர்மானித்துள்ளது.

வன்முறைகளை உருவாக்க கூடிய விதத்தில் பதியப்பட்ட அல்லது பகிர்ந்துகொள்ளப்பட்ட உள்ளடக்கங்களை நீக்கப்போவதை பேஸ்புக் உறுதிசெய்துள்ளது.

சில வகையான பிழையான தகவல்கள் உடல்ரீதியான வன்முறைகளிற்கு வித்திட்டுள்ளன,நாங்கள் அவ்வாறான உள்ளடக்கங்களை நீக்க கூடிய கொள்கையை பின்பற்றப்போகின்றோம் என பேஸ்பு நிறுவன பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாதங்களில் நாங்கள் அந்த கொள்கையை நடைமுறைப்படுத்துவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிழையான மற்றும் வன்முறைகளை தூண்டக்கூடிய பதிவுகளை அடையாளம் காண்பதற்காக உள்ளர் அமைப்புகள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து செயற்படவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பௌத்தர்களிற்கு விசமூட்டப்பட்ட உணவுகளை முஸ்லீம்கள் வழங்குகின்றனர் போன்ற தகவல்களை  இலங்கை தொடர்பில் பேஸ்புக் அகற்றி வருகின்றது.

பேஸ்புக்கில் பரவிய பிழையான தகவல்கள் காரணமாக மியன்மாரிலும் மக்கள் வன்முறையை அனுபவித்துள்ளனர்