தமது உறவினர்கள் கேலி செய்வார்கள் என அஞ்சி, பிறந்த பச்சிளம் குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கணவன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் தினக்கூலியாக வேலை செய்யும் 48 வயதுடைய நபருக்கு 3 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர். 

மேலும் குறித்த பிள்ளைகளுக்கு திருமணம் ஆகி, பேரக்குழந்தைகளும் உள்ள நிலையில், அவரது மனைவி மீண்டும் கருவுற்றார். 

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமையன்று, சப்திபாரி கிராமத்தில் உள்ள அவர்களது உறவினரின் வீட்டுக்கு கணவன்- மனைவி இருவரும் சென்றபோது, மனைவி குழந்தையை பெற்றெடுத்தார். 

48 வயதில் குழந்தை பெற்றதால், தனது சொந்த பிள்ளைகள் முன்பு அவமானமாகிவிடும் எனவும், மேலும் உறவினர்களும் கிண்டல் செய்வார்கள் என்பதால் பிறந்த குழந்தையை கொன்று அருகில் இருந்த குளத்தில் வீசியுள்ளனர்.

பச்சிளம் குழந்தை குளத்தில் இறந்து மிதப்பதை கண்ட அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.  சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் விசாரணை நடத்தியபோது, பெற்றோரே குழந்தையை கொன்று வீசியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

பெற்ற தாயும் தந்தையுமே, குழந்தையை கொலை செய்து குளத்தில் வீசிய நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.