(நா.தினுஷா) 

கொழும்பு துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கியது போன்று மத்தள விமானநிலையத்தை இந்தியாவுக்கு வழங்கவில்லை என இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்தளை விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்ககாக 250 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது. இந்த முதலீடுக்கு இலாபமொன்றினை பெற்றுக்கொள்ள வேண்டும். காரணம் இப்பணத்தை வரியாக மக்களே செலுத்திவருகின்றனர். இவ்வாறான நிலையில் மத்தள விமானநிலையத்தினுடாக  இலங்கைக்கு கிடைக்கபெரும் மாத வருமானம் 65 இலட்சம் ரூபாய். ஆனால் இதற்கென அரசாங்கம் செலவிடும் மாதாந்த செலவு 2900 இலட்சம். 

இவ்வாறான நிலையில் மத்தள விமான நிலையத்தை ஒரேடியாக சர்வதேச விமானநிலையமாக மாற்றியமைக்க முடியாது. படிப்படியாகவே விமான நிலையத்தினை கட்டியெழுப்ப வேண்டும். குறித்த ஒரு வர்த்தகத்தை ஆரம்பிக்கம் போது நுகர்வோர் மத்தியில காணப்படும் கேள்விகளை மையமாக கொண்டே அவற்றை ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு ஆரம்பித்தால் மாத்திரமே இலாபத்தை பெற்றுகொள்ள முடியும். இலாபம் உள்ள இடத்தில் வர்த்தகம் ஒன்றை முன்னெடுப்பது பொருளதார கொள்கையாகவும் காணப்படுகின்றது. 

இந் நிலையில் இதற்கு தீர்வுகாணும் நோக்குடனே இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மத்தள விமானநிலையத்தை மீள் கட்டியெழுப்புவதற்கான ஒப்பந்தமொன்றினை மேற்கொள்ள தீர்மானித்தோம். 

ஆனால் கொழும்பு துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கியது போன்று மத்தள விமானநிலையத்தை இந்தியாவுக்கு வழங்கவில்லை. இந்த ஒப்பந்தத்தினால் 70 சதவீத வருமானம் இந்தியாவுக்கும் 30 சதவீத வருமானம் இலங்கைக்கு கிடைப்பதுடன், 40 வருடங்களில் இந்த ஒப்பந்தம் நிறைவடையும் என்றார்.