(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

மத்தள விமான நிலையம் தொடர்பான ஒப்பந்தத்தை இந்தியாவுடன் கைச்சாத்திட வேண்டுமாயின் விமான சேவை தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இல்லையேல் ஒப்பந்தத்தை கைச்சாத்திட முடியாது என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று மத்தள விமான நிலையம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இது தொடர்பில் அமைச்சர் சிறிபால டிசில்வா மேலும் குறிப்பிடுகையில்,

மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கும் போது நாம் தேசிய பாதுகாப்பு மற்றும் ஊழியர் உரிமைகளிலும் கவனம் செலுத்தியுள்ளோம். இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பாக எம்மிடம் பல நிபந்ததனைகள் உள்ளன. அதனை நாம் மாற்ற மாட்டோம். இதன்படி இலாபத்தில் 70 வீதத்தை இந்தியா கட்டாயம் வழங்கியே ஆக வேண்டும். 

அத்துடன் இந்தியாவுக்கு எக்காரணம் கொண்டு யுத்த விமானங்கள் தரிப்பதற்கு நாம் இடமளிக்க போவதில்லை. பாதுகாப்பில் எமது விமான படையினரே இருக்க வேண்டும். வெளியில் எவருக்கு அதிகாரமில்லை. அனர்த்த நடவடிக்கைகளின் போது எமது குழுவினரே தலையீடுவர். ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து அவதானம் செலுத்துவோம். இதுவே எமது நிபந்தனைகளாகும்.. 

அத்துடன் இந்த ஒப்பந்ததை கைச்சாத்திட வேண்டுமாயின் விமான சேவையை சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றினால் மாத்திரம் ஒப்பந்தத்தை கைச்சாத்திட முடியும். இல்லையேல் முடியாது என்றார்.