(எம்.மனோசித்ரா)

"மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு  விற்பனை செய்வது தொடர்பான ஒப்பந்தத்தில் வெளிப்படை தன்மை பேணப்பட வேண்டும். இது எமது நாட்டு அரசியல்வாதிகளினதும், அரச நிர்வாகிகளினதும் பொறுப்பாகும்." என இலங்கை மனித உரிமைகள் மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம் மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான ஒப்பந்தம் தொடர்பாக வெளிப்படைத் தன்மை பேணப்படவில்லை. அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் தேவைகளுக்கு ஏற்ப இவ்வாறான விடயங்களில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதற்கு இடமளிக்க முடியாது. இது ஊழல் மோசடிகளுக்கு வழிவகுக்கும். அவ்வாறு ஊழல் மோசடிகள் ஏற்படாதிருக்க வேண்டுமாயின் மத்தள விமான நிலையம் தொடர்பான ஒப்பந்ததில் வெளிப்படை தன்மை பேணப்பட வேண்டும். 

2013 மார்ச் மாதம் இவ் விமான நிலைய சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் மூலம் 2013 ஆம் ஆண்டு 48 மில்லியன் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது. எனினும் இவ் வருடத்தில் அதற்காக செலவிடப்பட்டுள்ள தொகை 2,828 மில்லியன்களாகும். இதே போன்று 2014 ஆம் ஆண்டு 3, 235 மில்லியன் செலவிடப்பட்டிருந்தாலும் அவ் வருடத்தில் 136 மில்லியன் வருமானமே கிடைத்துள்ளது. 2015 இல் 72 மில்லியன், 2016 இல் 49 மில்லியன், 2017 இல் 78 மில்லியன் மற்றும் இவ்வருடம் மே மாதம் வரை 14 மில்லியன் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன்படி குறித்த வருடங்களில் சுமார் 3, 898 மில்லியன் நஷ்டமே ஏற்பட்டுள்ளது. 

இவ்வாறு இலாபத்தை விடவும் அதிகமாக நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ள இவ் விமான நிலையத்தை தற்போது இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்காக பெறப்பட்ட கடன் மற்றும் வட்டி என்பவற்றை அரசாங்கம் எவ்வாறு மீளச் செலுத்தும் என்பதும், இந்தியாவுடனான ஒப்பந்தம் எவ்வாறானது என்பதும் அனைவருக்கும் தெளிவுபடுத்தபட வேண்டும் என்பதற்காகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.