தீவிரவாதிகளுடன் தொடர்புடைய ஏழு பேரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ள  மலேசிய காவல்துறையினர் இவர்களில் நாட்டின் மன்னருக்கும் பிரதமருக்கும் மரணஅச்சுறுத்தல் விடுத்த நபர் ஒருவரும் உள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.

யூலை 12 முதல் 17 வரையிலான காலப்பகுதியில் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இவர்களில் நான்கு மலேசிய பிரஜைகளும் மூன்று இந்தோனேசிய பிரஜைகளும் உள்ளனர் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மலேசிய மன்னர் பிரதமர் மற்றும் மத விவகாரங்களுக்கான அமைச்சர் ஆகியோரிற்கு சமூக ஊடகங்கள் மூலம்  மரண தண்டனை விடுத்த 34 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் மலேசிய தலைவர்கள் இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றவில்லை என்ற அடிப்படையிலேயே இந்த நபர் மிரட்டல்களை விடுத்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.

முஸ்லீம் பண்டிகைக்கு பின்னர் மலேசியா பிலிப்பைன்ஸ் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் குண்டுதாக்குதலை மேற்கொள்ளப்போவதாக எச்சரித்த  42 வயது நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதுதவிர இளம் ஆண் ஒருவரையும் பெண்ணையும் கைதுசெய்துள்ள காவல்துறையினர் குறிப்பிட்ட இளம்பெண் சிரியாவில் உள்ள மலேசிய ஐஎஸ் உறுப்பினர்களிற்கு பணம் அனுப்பியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட நபர் மலேசிய பெண்ணைதிருமணம் செய்துள்ளார் அவர் குடும்பத்துடன் சிரியா சென்று ஐஎஸ் அமைப்பில் இணைய திட்டமிட்டிருந்தார் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.