நாட்டின் சுயநிர்ணய உரிமைகள் யூதர்களுக்கு மாத்திரமே உள்ளது என்பதை பிரகடனப்படுத்தும் வகையிலான சட்டத்தை பல மாதங்களாக நீடித்து வந்த விவாதங்களுக்கு மத்தியில் இஸ்ரேல் இன்று நிறைவேற்றியுள்ளது.

120 பேரை கொண்ட பராளுமன்றில் குறித்த சட்டத்திற்கான வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது.இவ் வாக்கெடுப்பில் 62 பேர் ஆதரவாகவும், 55 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

வாக்கெடுப்பின் பின்னர்  இச் சட்டமானது இனவாதத்தை தூண்டும் வகையிலானது என்று தெரிவித்து அரபு சிறுபான்மை உறுப்பினர்கள் மன்றில் கோஷமிட்டு ஆவணங்களை கிழித்தெறிந்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இது தொடர்பாக இஸ்ரேல் அரேபிய சட்டமன்ற உறுப்பினர் கூறுகையில்,

”இந்த சட்டமூலமானது வெறுப்புணர்வை தூண்டும் வகையிலானதாகும். இது அரேபிய குடிமக்களுக்கும், அரேபிய சிறுபான்மையினருக்கும் எதிராக முற்றிலும் பாகுபாடு காட்டும் விடயமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரதமர் பென்சமின் நெதன்யாஹு,

"இது இஸ்ரேல் அரசின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தருணமாகும். மேலும் இஸ்ரேலின் ஜனநாயகத்தில் சிவில் உரிமைகளை உறுதிசெய்வோம். இது எவருக்கும் தீங்கிழைக்காது"  என  தெரிவித்துள்ளார்.