(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

மலையக மக்களுக்கு எவ்வாறு வாக்குரிமையை ஐக்கிய  தேசியக் கட்சி வழங்கியதோ அதேபோல் இப்போது காணி உரிமையை வழங்கி வருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று நாட்டினை கட்டியெழுப்புதல் வரி (திருத்தம்) சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு மற்றும் காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) திருத்த சட்டமூல  இரண்டாம் மதிப்பு மீதான விவாதம் இடம்பெற்ற நிலையில் அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

 

மலையக மக்களுக்கு எவ்வாறு வாக்குரிமையை ஐக்கிய  தேசியக் கட்சி வழங்கியதோ அதேபோல் இப்போது காணி உரிமையை வழங்கி வருகின்றது. மலையக பகுதிகளில் வாழும் மக்களுக்கு வெவ்வேறு பெயர்களில் அழைத்தனர். எனினும் இப்போது எமக்கென ஒரு அடையாளம் வந்துள்ளது. மலையக தமிழர் என்ற தனி அடையாளமா இன்று எமக்கு உருவாகியுள்ளது. இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியே காரணமாகும். 

மலையகத்தில் தமிழ் மக்களுக்கு காணி உரிமை வழங்குவதை போலவே வடக்கில் தமிழ் மக்களுக்கும் உரிய காணிகளை வழங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு காணிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியினால் மட்டுமே நாட்டில் இன ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்றார்.