(எம்.சி.நஜிமுதீன்)

மத்திய வங்கி மோசடி மூலம் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுசெய்வதற்கு வரிக்கொள்கையை இன்னும் 25 சதவீதத்தினால் அதிகரிக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

இன்று பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில் இடம்பெற்ற கூட்டு எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது நாட்டில் போதைப்பொருள் வர்த்தகம் என்றுமில்லாத வகையில் அதிகரித்துள்ளது. அதன் பின்னணியில் அமைச்சர்கள் உள்ளனர். அமைச்சர்களின் வாகனங்களில் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் போதைப்பொருள் கொண்டுபோகும்போது பொலிஸாரிடம் சிக்கிக் கொண்ட சம்பவங்களும் உண்டு. எனினும் அவர்களுக்கு எதிராக பொலிஸாரால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது போயுள்ளது.

அத்துடன் அரசாங்கத்தின் அனுசரணையுடன் போதைப்பொருள் கொண்டுவரப்படுகிறது. உதாரணமாக ச.தொ.ச. நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட பைகளில் போதைப்பொருள் கொண்டுவரப்பட்டுள்ளது. ச.தொ.ச. நிறுவனத்திற்குள் போதைப்பொருள் சிக்கியதையும் ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன. இந் நிலையில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளின் பின்னணியில் யார் உள்ளார் என்பது தெளிவாகியுள்ளது.

மேலும் மத்திய வங்கி பிணைமுறி மோசடியினால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுசெய்வதாக இருப்பின் வரிக்கொள்ளையை இன்னும் இருபத்தைந்து சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டும். அதனையே அரசாங்கம் மேற்கொள்வதற்கு முனைகிறது. எனவே குறித்த மோசடிக்கு மக்கள் வரி மூலம் நஷ்டஈடு செலுத்தும் நிலையினை ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியுள்ளனர் என்றார்.