(எம்.மனோசித்ரா)

எதிர்மறையான கொள்கைகளை உடைய நாடுகளின் அதிகாரத்தை வெளிப்படுத்துவதற்கு எமது நாட்டின் சொத்துக்களை தரைவார்த்து கொடுக்க முடியாது. அதற்கு கூட்டு எதிர் கட்சி ஒருபோதும் இடமளிக்காது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவத்தார். 

மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக தினேஷ் குணவர்த்தன தலைமையிலான கூட்டு எதிரணியினர் இன்று சிவில் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

மத்தள விமான நிலையத்தை விற்பனை செய்யும் செயற்பாட்டினை சாதாரண விடயமாக கருத முடியாது. உலக அரசியல் விவகாரங்களுக்குள் இலங்கை வலிந்து போய் சிக்க்கிக்கொள்ள கூடாது. அவ்வாறு சிக்கிக்கொண்டால் நாட்டின் இருப்பு தேசிய பாதுகாப்பு என்பன கேள்விக்குறியாகிவிடும். 

எதிர்மறையான கொள்கைகளை உடைய நாடுகளின் அதிகாரத்தை வெளிப்படுத்துவதற்கு எமது நாட்டின் சொத்துக்களை தரைவார்த்து கொடுக்க முடியாது. அதற்கு கூட்டு எதிர் கட்சி ஒருபோதும் இடமளிக்காது. வணிக ரீதியான விடயம் என்றாலும் தேசிய பாதுபாப்பிற்கு அச்சுறுத்தல் என்றால் அதனை அனுமதிக்க முடியாது. 

ஆகவே மத்தள விமான நிலையத்தை விற்பனை செய்த விவகாரம் இறையான்மைக்கு அச்சுறுத்தலான விடயமாகும். எனவே அதற்கு எதிராக கூட்டு எதிர் கட்சி பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுக்கும் என தெரிவித்தார்.