இந்தியா - சட்டீஸ்கார் மாநிலத்தில் ராய்ப்பூர் மாவட்டத்தில் இரண்டு மாத குழந்தை ஒன்று அம்புலன்ஸின் கதவு திறக்க முடியாததால் மூச்சு திணறி பலியாகியுள்ளது.

ராய்ப்பூர் ரயில் நிலையத்தில் 2 மாத கைக்குழந்தையுடன் தம்பதிகள் வந்திறங்கிய போது குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட உடனே  குழந்தையின் தந்தை அம்புலன்ஸை வரவழைத்து குழந்தையை ஏற்றிக் கொண்டு அருகில் இருந்த வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

வைத்தியசாலைக்கு சென்ற அம்புலன்ஸின் கதவு திறக்க முடியாமல் போக அம்புலன்ஸ் சாரதி மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் பலமுறை முயற்சி செய்தும் கதவை திறக்க முடியாது போயுள்ளது.

பலத்த முயற்சிகளின் பின் கதவு உடைக்கப்பட்டது. பின்னர் குழந்தையை பரிசோதித்த வைத்தியர்கள் ஒக்ஸிஜன் குறைபாடு காரணமாக உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

அம்புலன்ஸ் கதவு திறப்பதற்கு இரண்டு மணி நேரம் ஆனதால் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.