இந்தியாவின் உத்திரப்பிரதேஷ் மாநிலத்தில் நொய்டா பகுதியில் இரண்டு கட்டடங்கள் இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த மூவரின் உடல்களை மீட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. 

நேற்றிரவு நொய்டா பகுதியிலுள்ள ஷாபரி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் 6 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழ ஆரம்பித்தது. இதனால் அதன் அருகாமையில் இருந்த 4 மாடி கட்டடமும்  இதனுடன் சேர்ந்து இடிந்து வீழ்ந்தது.

இவ் விபத்தில் நான்கு மாடிக் கட்டடத்தில் வசித்து வந்த 18 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50 க்கும் அதிகமானோர் இடிபாடிகளில் சிக்கியிருக்கலாம் என்பதுடன் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.

கட்டடங்கள் இடிந்து வீழ்ந்த தகவல் அறிந்த மீட்பு படையினரும் தீயணைப்புத் துறையினரும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி இதுவரை உயிரிழந்த மூவரின் உடல்களை மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.