சிட்னியில் வசித்த இலங்கையை சேர்ந்த அகதிகள் குடும்பத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் பிரித்தமை குறித்து யுஎன்எச்சீஆர் கடும் அச்சம் வெளியிட்டுள்ளது.

தந்தையை இரவில் அவுஸ்திரேலியா நாடு கடத்தியதன் காரணமாக அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்ட தாய் 11 மாத குழந்தையுடன் தனித்து விடப்பட்டுள்ளார் என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.

இது நடவடிக்கை குடும்பஐக்கியம் என்ற அடிப்படை உரிமைக்கு முரணானது,குழந்தையின் நலன் குறித்த அடிப்படை கொள்கைகளிற்கும் முரணானது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.

தந்தை நாடு கடத்தப்படமாட்டார் குடும்பத்துடன் இருப்பதற்கு அனுமதிக்கப்படுவார் என்ற உத்தரவாதத்தை அவுஸ்திரேலியாவிடமிருந்து கோரியிருந்ததாக ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சருக்கு பல தனியார் சட்டத்துறையினர் வேண்டுகோள் விடுத்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.

கடல்வழியாக அவுஸ்திரேலியாவை சென்றடைபவர்கள்  அவுஸ்திரேலியாவில் உள்ள த ங்கள் குடும்பத்தவர்களுடன் சேரவிடாமல் தடுக்கப்படுகின்றனர் எனவும் யுஎன்எச்சீஆர் குறிப்பிட்டுள்ளது.

நவ்றுவில் இவ்வாறு பல பெற்றோர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் கர்ப்பிணிகளான மனைவிமார்கள் பிரசவத்திற்காக அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பபட்டுள்ளனர்,நவ்று அல்லது பப்புவா நியுகினி அகதிகள் குடியேற்றத்திற்கான பொருத்தமான இடமில்லை என்ற போதிலும் குடும்பங்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் இணையவிடவில்லை எனவும் ஐநா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

சில சமயங்களில் பெற்றோர்கள் சிகிச்சைக்காக அவுஸ்திரேலியா செல்லும்வேளை குழந்தைகள் நவ்றுவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் இது குழந்தைகளின் உளநலத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் இலங்கை அகதிகள் விவகாரம் வெறுமனே குடும்பங்களை ஒன்றுசேரவிடாமல் தடுப்பதற்கு அப்பாற்பட்டது எனவும் யுஎன்எச்சீஆர் தெரிவித்துள்ளது.