(எம்.சி.நஜிமுதீன்)

உருவாக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றத்தினூடாக நியாயம் நிலைாட்டப்படப்போவதில்லை. மாறாக நீதிமன்ற நடவடிக்கைகளை அரசியல்மயப்படுத்தவே விசேட நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு ஸ்ரீவஜிராஷர்ம பெளத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது நாட்டில் மக்கள் வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதனால் அரசாங்கத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர். ஆகவே அதிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கு பல்வேறு உபாயங்களை அரசாங்கம் பிரயோகித்து வருகிறது. 

அதன் ஒரு கட்டமாகவே போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டணை விதிக்கப்பட்டவர்களுக்கு தண்டணையை அமுல்படுத்துவது குறித்து கவனம் திருப்பப்பட்டுள்ளது. 

எனினும் அத்தண்டணையை அமுல்படுத்த முடியாது. ஏனெனில் தண்டணை விதிக்கப்பட்டவர்கள் மேன்முறையீடு செய்துள்ளனர். அத்தீர்ப்பு வரும் வரையில் தண்டணை நிறைவேற்ற முடியாது. அத்துடன் மரண தண்டணை தொடர்பில் இலங்கை, சர்வதேச உடன்படிக்கைகளில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். 

மேலும் இவ்வார பாராளுமன்ற அமர்வில் விசேட நீதிமன்றம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம். இந்த நாட்டிலுள்ள நீதிபதிகள் தமது கடமைகளை உரிய முறையில் மேற்கொள்கின்றனர். அவர்கள் மனசாட்சிக்கு எதிராக பணியாற்றுபவர்கள் அல்ல. அவ்வாறெனின் எதற்காக விசேட நீதிமன்றம் அமைக்க வேண்டும்?

மேலும் விசேட நீதிமன்றத்தின் மூலம் நியாயம் நிலைநாட்டப்படப்போவதில்லை. விசேட நீதிமன்றம் மற்றும் விசேட ஆணைக்குழுக்கள் மூலம் அரசியல் பழிவாங்கலுக்கே வழிகோலும் என்றார்.