சர்வதேச தடகள கழகத்தின் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்தியாவின் 18 வயது ஹிமா தாஸ் தங்கப் பதக்கம் வென்றார். இந்த சாதனையை படைத்த முதல் இந்திய பெண் ஹிமா தாஸ், ஏழு வயதிலேயே விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு சென்றவர்.

இயல்பிலேயே விளையாட்டு ஆர்வம் கொண்டிருந்த ஹிமா தாஸ், சிறுமியாக இருக்கும்போதே பொலிஸ் நிலையதிற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

2007 ஆம் ஆண்டு அசாம் மாநிலம் நெளகாவ் மாவட்டத்தில் மழைக்கால மாலைப் பொழுது. காந்துலிமாரி கிராமத்தில் சண்டை போடும் சப்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்தார் ரஞ்சித் தாஸ்.

வீட்டு வாசலில் சிறுவன் ஒருவன் வலது கையைப் பிடித்தவாறே சத்தமிட்டுக் கொண்டிருந்தான். அவன் அருகில் நின்று அவனுக்கு புரிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாள் ஏழு வயது ஹிமா தாஸ். இருவரும் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது, சிறுவன் கீழே விழுந்து காயம் ஏற்பட்டதால், அதற்கு ஹிமா தான் காரணம் எனக் கூறி அழுது கொண்டிருந்தான்.

ஹிமாவின் தந்தை ரஞ்சித் தாஸ் அங்கு வருவதற்கு முன்னரே அவருடைய அண்ணன், அடிபட்ட சிறுவனின் குடும்பத்தினருக்கு பணம் கொடுத்து பிரச்சனையை முடித்து வைத்துவிட்டார்.

இருந்தாலும் சமாதானமடையாத அந்த சிறுவனின் குடும்பத்தினர், கிராமத்தில் இருந்த பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்தனர். 

பொலிஸ் நிலையத்தில் இருந்து பொலிஸ் அதிகாரி ஒருவர் வந்து ஹிமா தாஸின் கையைப் பிடித்து விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

பொலிஸ் நிலைய கண்காணிப்பாளர் ஹிமாவை பார்த்த்தும், இது சிறுவர்களின் விளையாட்டில் நேரிட்ட விபத்து, இதை பெரிதுபடுத்துகிறார்கள் என்பதை புரிந்துக் கொண்டு, ஹிமாவை வீட்டுக்கு அனுப்பி விட்டார்.

ஹிமாவின் தந்தை ரஞ்சித் தாஸ் இப்போதும் ஒரு சம்பவத்தை பெருமையுடன் நினைவு கூர்கிறார்.

"சிறுமியாக இருக்கும்போதே மிகவும் தைரியசாலி என் மகள் ஹிமா. வயலில் எனக்கு உதவி செய்வதாக இருக்கட்டும், கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு உதவி செய்வது, வைத்தியசாலைக்கு  அழைத்துச் செல்வது என தானாகவே முன்வந்து உதவி செய்யும் சுபாவம் கொண்டவள் ஹிமா. 

ஆனால், தற்போது அவள் பெற்றிருக்கும் வெற்றி சுலபமாக கிடைக்கவில்லை, அதற்காக அவள் பல தடைகளை கடந்து வந்திருக்கிறாள்" என்கிறார் 

அவரது வெற்றிக் கதை, சுவராசியங்களும், எதிர்பாரா திருப்பங்களும் நிறைந்தது.

அவருடைய கிராமத்தில் மின்சாரம் நாளொன்றுக்கு மூன்று அல்லது நான்குக் மணி நேரங்கள் மட்டுமே கிடைக்கும். அங்கு விளையாட்டு மைதானமோ அல்லது வேறு எந்த அடிப்படை வசதிகளோ கிடையாது.

2016 ஆம் ஆண்டு வரை ஹிமா தாஸ் ஓட்டப் பயிற்சி செய்தது காலை முதல் மாலை வரை கால்நடைகள் மேய்ச்சலுக்காக அழைத்து வரப்படும் மைதானத்தில்தான்.அவர் ஓட்டப்பயிற்சி மேற்கொள்வார். 

ஆண்டில் மூன்று மாதங்கள் மழை நீரால் நிறைந்திருக்கும் மைதானம் அது. எந்தவொரு வசதியும் இல்லாத சூழ்நிலையில் இருந்து தோன்றிய தங்கத் தாரகை ஹிமா தாஸ்.

ஹிமாவின் அண்டை வீட்டில் வசிக்கும் ரத்னேஷ்வர் தாஸ் ஹிமா பற்றி குறிப்பிடும் போது

"சாலையில் செல்லும்போது எதாவது கார் சென்றால், அதனுடன் போட்டிப் போட்டுக்கொண்டு ஓடும் ஹிமா, காரை முந்திச் செல்ல முயற்சி செய்வாள். கிராமத்தில் பெரிய அளவு வசதி எதுவும் இல்லாதபோதிலும், இருக்கும் வசதிகளை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு முன்னேறினாள் ஹிமா" என்றார். 

விளையாட்டில் மிகவும் ஆர்வம் கொண்டவர் ஹிமா என அவருடைய சிறுவயது நண்பர் ஜாய் தாஸ் தெரிவிக்கும் பொழுது

"பல ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம் அது. கிராமத்தில் இளைஞர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த இடத்திற்கு வந்த ஹிமா, தானும் கால்பந்து விளையாட விரும்புவதாக கூறினாள். நீ விளையாட முடியாது என கூறியதைக் கேட்காமல் அடம் பிடித்தாள். எனக்கும் அவளுக்கும் சண்டை வந்து, கைகலப்பும் ஏற்பட்டது. பின் நாங்கள் மீண்டும் நண்பர்களாகிவிட்டோம். ஆனால் அதற்குள் அவள் கோல் அடிக்கும் அளவு சிறப்பாக கால்பந்து விளையாட ஆரம்பித்துவிட்டாள்" என்றார்.

தலைநகர் கெளஹாத்தியில் இடம்பெற்ற ஒரு முகாமில் பங்கேற்க ஹிமா தாஸ் சென்ற போது நிபுண் தாஸ் அவரின் திறமையை கண்டறிந்தார்.

விவசாய பிண்ணனியைக் கொண்ட ஹிமாவின் கிராமத்திற்கு சென்று, அவரது குடும்பத்தினரிடம் பேசிய நிபுண். ஹிமாவிடமுள்ள திறமையைப் பற்றி எடுத்துச் கூறிய அவர், தான் அவருக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கத் தயாராக இருப்பதாக கூறினார்.

விவசாயத்தை வாழ்வாதாரமாக் கொண்ட ஹிமாவின் குடும்பம், கெளஹாத்தில் ஹிமா தங்கி பயிற்சி செய்வதற்கான செலவுகளை எதிர்கொள்ள முடியாத வறிய நிலையில் இருந்தது.

ஹிமா கெளஹாத்திக்கு வருவதற்கு அனுமதி மட்டும் கொடுத்தால் போதும், மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பயிற்சியாளர் நிபுண் தாஸ் உறுதியளித்தார். 

குக்கிராமத்தை சேர்ந்த ஹிமா தாஸ் கெளஹாத்திக்கு பயிற்சிக்காக சென்றபோது, பலவிதமான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அவர் அதைப் பற்றி கவலைப்படவில்லை, திரும்பி பார்க்கவும் இல்லை. தனது இலக்கான விளையாட்டில் மும்முரமாக கவனம் செலுத்தினார்.

ஆனால், ஹிமா தங்கப் பதக்கம் வெற்றிப்பெற்றதை முழு கிராமமுமே தற்போது கோலாகலமாக கொண்டாடுகிறது.

ஹிமா தாஸின் குடும்பம் விவசாய பின்னணியைக் கொண்டது. நெல் மற்றும் காய்கறிகளை பயிரிட்டு வாழும் ஹிமாவின் குடும்பத்தினர், ஹிமா பெற்ற வெற்றிக் கோப்பைகளையும், சான்றிதழ்களையும் தங்களின் சொத்தைப் போல பாதுகாக்கின்றனர்; அவற்றை அடுக்கி வைத்து அனைவரிடமும் காட்டி அழகு பார்க்கின்றனர்.

வீட்டிற்க்கு வரும் விருந்தினர்களை உபசரிப்பதற்கும், ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுப்பதற்குமே ஹிமாவின் தாய் ஜோனாலி தாஸுக்கு தற்போது நேரமில்லை என்கிறார்கள்.

ஹிமாவைப் பற்றி அவரது தாய் தெரிவிக்கையில்.

"தொடக்கத்தில் கால்பந்து விளையாட்டில்தான் ஹிமாவுக்கு மிகவும் ஆர்வம் இருந்த்து. அக்கம்பக்கத்து கிராமங்களில் நடக்கும் கால்பந்து போட்டிகளிலும் கலந்துக் கொள்வாள். எந்தவொரு போட்டியிலும் கோல் அடிக்காமல் இருந்தது கிடையாது. கிடைக்கும் பரிசுத்தொகையை கொண்டு வந்து என்னிடம் கொடுப்பாள். ஆனால் அவளுக்கு பணம் எதாவது தேவைப்பட்டால், என்னிடம் கேட்கமாட்டாள், அப்பாவிடம்தான் கேட்பாள்" என கூறினார் ஹிமாவின் தாய்.

பெண்பிள்ளையை விளையாட்டுக்காக வெளியூருக்கு அனுப்பலாமா என்ற விமர்சனங்களுக்கு தன் மகள் சரியான பதில் கொடுத்திருப்பதாக சொல்லி ஜோனாலி தாஸ் மகிழ்ச்சியடைகிறார்.

விமர்சனங்களும் பொருளாதார பிரச்சனைகளும் ஹிமா தாஸின் விளையாட்டு ஆர்வத்தை குறைக்கவில்லை.

ஹிமாவின் தந்தை ரஞ்சித் தாஸின் நண்பர் தீபக் போரா, ஹிமா கலந்துக் கொள்ளும் போட்டிகள் அனைத்தையும் பார்ப்பார்.

"ஹிமா அரையிறுதிப் போட்டியில் ஓடுவதை கெளஹாத்தியில் இருந்து பார்த்தேன். அவளுக்கு மூன்றாவது இடம் கிடைத்தது வருத்தமளித்தது. இப்படி கவலைப்பட்டால் ஹார்ட் அட்டக் வந்துவிடும் என்று என் மனைவி திட்டினார். சற்று நேரத்தில் எனக்கு தொலைப்பேசியில் அழைத்த  ஹிமா, நாளைக்கு பாருங்கள் எனக் கூறினாள், சொன்னதுபோலவே தங்கம் வென்றுவிட்டாள்" என்கிறார் தீபக் போரா.

பதக்கம் பெற்றாலும் ஹிமாவின் தந்தையின் மனதில் ஒரு சிறிய வருத்தம்,

"என் மகள் தங்கப் பதக்கம் வென்றது நம் நாட்டுக்கும், எங்கள் வீட்டுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம். அதை அவள் பெறும் தருணம் எங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தருணம். ஆனால், மின்சாரம் இல்லாததால், அவள் பதக்கம் வென்றதை எங்களால் பார்க்கமுடியவில்லை".

உள்ளூர் கால்பந்துப் போட்டிகளில் விளையாடி நூறு, இருநூறு ரூபாய்களை பரிசாகப் பெற்ற ஹிமாவுக்கு தற்போது லட்சக்கணக்கான பரிசுத்தொகைகள் வந்து குவிகின்றன. அரசு வேலை தருவதாக அறிவித்துள்ளது.

ஆனால் இதுபற்றி ஹிமா "2020 ஒலிம்பிக் விளையாட்டில் பங்கெடுப்பதற்கு முன்பு வேலைக்கு செல்லமாட்டேன். ஓட்டப் பயிற்சிகளில்தான் ஈடுபடுவேன்" எனக் கூறியுள்ளார்.