(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

நாட்டுக்கு மோசமான தன்மைகளை கொண்ட இலங்கை சிங்கப்பூர் உடன்படிக்கையை உடனடியாக இடைநிறுத்தி உடன்படிக்கையின் சரத்துக்களை மாற்றியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது எதிரணியின் உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். 

இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக பொது எதிரணியின் உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன கொண்டு வந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

சிங்கப்பூருடன் மேற்கொள்ளவுள்ள உடன்படிக்கை அமைச்சரவையின் அனுமதியை பெறாது அரசியலமைப்பை மீறியே செய்துகொள்ளப்பட்டுள்ளது. இதில் அச்சுறுத்தலான விடயங்கள் பல காணப்படுகின்றன. இதனால் இந்த உடன்படிக்கையை அரசாங்கம் கைவிட வேண்டும் என்பதுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக மக்களுக்கு அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.

குறித்த உடன்படிக்கையை செய்வதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடியிருக்க வேண்டும். ஆனால் யாருடனும் கலந்துரையாடாது அமைச்சரவையின் அனுமதியையும் பெற்றுக்கொள்ளாது அவசரமாக அந்த உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்டுள்ளது. 

ஆகவே இவ்வாறான உடன்படிக்கைகளை செய்து கொண்டதன் மூலமாக எமது உள்நாட்டு கைத்தொழில் துறையினருக்கு பாரிய நெருக்கடிகள் ஏற்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றார்.