மகளிர் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரின் உரை தொடர்பில் வடமாகாண முதலமைச்சர்  சி.வி. விக்கினேஸ்வரன் மற்றும் சில ஊடகவியலாளர்களிடம் வாக்கு மூலங்கள் பெறப்பட்டு உள்ளன. 

அண்மையில் யாழில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது , விஜயகலா மகேஸ்வரன் "விடுதலைப்புலிகள் மீள் உருவாக வேண்டும்" என தெரிவித்திருந்தார். 

அது தொடர்பில் தெற்கில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை அடுத்து விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டதுடன் , அது தொடர்பிலான விசாரணைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. 

இந்நிலையில் யாழில் தங்கி நின்று திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

அந்த பிரிவினர் இன்றைய தினம் காலை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று அவரின் வாக்கு மூலத்தினை பதிவு செய்தனர். 

பின்னர் அன்றைய தினம் நிகழ்வில் கலந்துகொண்டு செய்தி அறிக்கையிட்ட ஊடகவியலாளர்களை யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து அவர்களின் வாக்கு மூலங்களையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.