(எம். எம். எஸ்.)

பகார் ஸமானின் சதத்தின் உதவியுடன் ஸிம்பாப்வே  அணிக்கெதிரான 2 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான்  அணி 9 விக்கெட்டுக்களால் அபார வெற்றியீட்டியது.

ஸிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான்  அணி ஸிம்பாப்வே கிரிக்கெட் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்று வருகிறது.

இத்தொடரின் 2 ஆவது போட்டி நேற்று புலவாயோவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட ஸிம்பாப்வே தீர்மானித்தது. இதன்படி ஸிம்பாப்வே அணிக்கு பிறையன் சாரி, சம்மு சிபாபா ஆகியோர் களமிறங்கினர். இவர்களிருவரும் ஒற்றை இலக்கங்களுடன் வெளியேற இரண்டாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அணித்தலைவர் ஹெமில்டன் மஸகட்ஸா, தராசி முசகண்டா ஆகியோர் நிதானமாகத் துடுப்பெடுத்தாடி தமக்கிடையில் 62 ஓட்டங்களை பகிர்ந்தவேளையில்  முசகண்டா 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஹெமில்டன் மஸகட்ஸா சர்வதேச ஒருநாள் அரங்கில் 34 ஆவது அரைச்சதத்தை கடந்த இவர், 75 பந்துகளில் 2 சிக்ஸர்கள் , 2 பெளண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். ஹெமில்டன் மஸகட்ஸா அடித்த இந்த இரண்டு பெளண்டரிகளுடன் ஸிம்பாப்வே அணிக்காக அதிக பெளண்டரிகளை (559) விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றார். இவரின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து ஸிம்பாப்வே அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தன. ஸிம்பாப்வே அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 194 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் உஸ்மான் கான் 4 விக்கெட்டுக்களையும், ஹசன் அலி 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணிக்கு பகார் ஸமானுடன் இமாமுல் ஹக் ஆரம்ப வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி ஆரம்பம் முதலே அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி தமக்கிடையில் 119 ஓட்டங்களை பகிர்ந்திருந்தவேளையில், 44 ஓட்டங்களுடன் வெளியேறினார். எனினும் மறுமுனையில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி பகார் ஸமான் சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி 36 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. ஆட்டமிழக்காமல் 117 ஓட்டங்களை பெற்ற பகார் ஸமான் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவானார்.

5 போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் 2க்கு 0 என்ற கணக்கில் பாகிஸ்தான் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவது போட்டி நாளை இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.