(எம்.சி.நஜிமுதீன்)

நல்லாட்சி அரசாங்கம் வடக்கிற்கு ஒரு விதமாகவும் தெற்கிற்கு மற்றுமொரு விதமாகவும் சட்டத்தை அமுல்படுத்துகிறது என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பத்தரமுல்லையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்து குறித்து பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர பாராளுமன்றில் கேள்வி எழுப்பினார். எனினும் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காததால் நாம் சபையின் மத்திய பகுதிக்கு வந்தோம். 

இந் நிலையில் தற்போது பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவால் விசாரிக்கப்பட்டுள்ளார்.  எனினும் தேச துரோகமான கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே நல்லாட்சி அரசாங்கம் வடக்கிற்கு ஒரு விதமாகவும் தெற்கிற்கு மற்றுமொரு விதமாகவும் சட்டத்தை அமுல்படுத்துகிறது. ஆகவே ஏதோ ஒரு விதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவுக்கு எதிராக தீர்மானம் மேற்கொள்ளப்படின் பாராளுமன்றத்தை நடத்திச் செல்வதில் சவாலை எதிர்கொள்ள வேண்டிய  நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.