இராஜதுரை ஹஷான்)

அம்பாந்தோட்டை துறைமுகத்தினை அரசாங்கம் சீனாவிற்கு  வழங்குவதற்கு எவ்வாறு சூழ்ச்சிகளை மேற்கொண்டதோ  அதனையே மத்தளை விமான நிலையத்தை இந்தியாவிற்கு வழங்கும் விடயத்திலும்  கையாளுகின்றது  என கூட்டு எதிரணியினர் தெரிவித்தனர்.

மத்தளை விமான நிலையத்தின்  கலநிலவரத்தினை  பார்வையிடுவதற்காக  நேற்று   கூட்டு எதிரணியின் 40 ற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்   சென்றிருந்தனர். 

இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க   குறிப்பிடுகையில்.

மத்தளை விமான நிலையத்தினை சீர் செய்யும் நடவடிக்கையின் காரணமாக பாரிய நிதி ஒதுக்கப்பட்டு வருகின்றது.  

எனினும் அரசாங்கத்தினால் தனித்து திருத்த பணிகளை மேற்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டு அரசாங்கம் குறித்த விமான நிலையத்தினை இந்தியாவிற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது .இதில் 70 சதவீதம் இந்தியாவிற்கு உரிமையாக்கபடவுள்ளது.

 மத்தளை விமான  நிலையத்தில் இதுவரை காலமும் எவ்வித முழுமையான நிர்மானப்பணிகளும் இடம் பெறவில்லை.   அரசாங்கம் தொடர்ந்து திருத்தப்பணிகளை மேற்கொண்டு வருவதாக அனைவரையும் ஏமாற்றி வந்துள்ளது.    மஹிந்த ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து அபிவிருத்திகளையும்  பிற நாடுகளுக்கு தாரை வார்த்து கொடுப்பதே  அரசாங்கத்தின் தற்போதைய நோக்கமாக காணப்படுகின்றது.

 அம்பாந்தோட்டை துறைமுகத்தினை  சீனாவிற்கு வழங்கும் போது அரசாங்கம் எவ்வாறு  சூழ்ச்சிகளை மேற்கொண்டதோ அதனின் இரண்டாம் பாகத்தினை தற்போது  மத்தளை  விமான நிலைய விவகாரத்திலும் பிரயோகித்து வருகின்றது.   துறைமுகம் தொடர்பில் செய்துக் கொண்ட முறையற்ற ஒப்பந்தத்தின் காரணமாக ஏற்பட்ட விளைவுகளை கடந்த காலங்களில் அரசாங்கம் நன்கு அனுபவித்தது.

இந்நியா இலங்கையில் ஆதிக்கத்தை செலுத்துவதற்கு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போது அரசாங்கம் அதற்கு வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. கடந்த  காலங்களில்  இலங்கையின் பல முக்கிய திட்டங்கள் சீனாவிற்கு வழங்கப்பட்டமையின் காரணமாக இந்தியா பல  வழிமுறைகளில் அழுத்தங்களை பிரயோகித்தது. ஆகவே மத்தளை விமான நிலையம் தொடர்பில் இலங்கை விதிக்கின்ற அனைத்து நிபந்தனைகளையும் இந்தியா  ஏற்றுக் கொள்ளும்  அதன் பின்னரே பல விளைவுகள் தோற்றம் பெரும் 

 மத்தளை விமான நிலையத்தை இந்நியாவிற்கு வழங்குவது தொடர்பில்  அடுத்த மாதம் 06 ஆம் திகதி பாராளுமன்றத்தில்  கவனத்தில் கொள்ளப்படவுள்ளது இதன் போது கூட்டு எதிரணியினர் தமது கடுமையான எதிர்ப்பினையே வெளிப்படுத்துவார்கள்  . அத்துடன் மக்களை  ஒன்றுத்திரட்டி  அரசாங்கத்தின் நோக்கத்தின் முயற்சிகளை முறியடிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.