(எம்.எம்.மின்ஹாஜ்)

உருவாக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றத்தில் எந்த வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதியோ பிரதமரோ தீர்மானிக்க முடியாது. நீதிமன்றமே அதனை தீர்மானிக்கும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.

சிறிகொத்தாவிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

பாரியளவிலான மோசடிகள் குறித்த வழக்குகளை துரிதப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றத்தின் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த நீதிமன்றத்தில் எந்த வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என ஜனாதிபதியினாலோ அல்லது பிரதமரினாலோ தீர்மானிக்க முடியாது. நீதிமன்றமே அதனை தீர்மானிக்கும்.

மேலும் கோத்தாபய ராஜபக்ஷ கேட்டாலும் அவருடைய வழக்குகளை முதலில் எடுக்க முடியாது. இந்த நீதிமன்றம் அரசியல் பழிவாங்கலுக்காக உருவாக்கப்படவில்லை. நல்லாட்சியில் உள்ள அமைச்சர்கள் ஏதாவது மோசடிகள் செய்திருந்தால் அதனையும் விசாரிக்க வேண்டும் என்றார்.