(நா.தனுஜா)

உயர்மட்டத்திலான பொருளாதார வளர்ச்சியினை அடைந்துகொள்வதற்கு சிறார்களின் முன் சிறுபராய வளர்ச்சி முறையான விதத்தில் அமைய வேண்டும் என நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். 

'மூளை வளர்ச்சி எதிர்காலத்தை கட்டியெழுப்பல்' எனும் தொனிப்பொருளில் இன்று சினமன் லேக்சைட் ஹோட்டலில் நடைபெற்ற முன் சிறுபராய வளர்ச்சி தொடர்பான உயர்மட்ட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்வதில் சிறார்களின் முன் சிறுபராய வளர்ச்சி பிரதான பங்கினை வகிக்கின்றது. உயர் போட்டித்தன்மையுடையதும் அறிவார்ந்ததுமான சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு சிறுபராய உடலியல் மற்றும் மூளை வளர்ச்சி என்பன தொடர்பில் அக்கறையுடன் செயற்படுதல் அவசியமாகும்.


மேலும் கல்வி மற்றும் கல்வி சார்ந்த விடயங்களில் முதலீடுகளின் அளவினை அதிகரித்துள்ளதோடு அதன் விரிவாக்கத்திற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாடசாலைகளில் தரம் ஒன்று தொடக்கம் உயர் தரம் வரையான பாடத்திட்டம் மற்றும் அவற்றின் அரச, தனியார் துறைகளின் முதலீடு என்பன தற்போது அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ள முக்கிய காரணிகளாக உள்ளன என்றார்.