(ரி.விரூஷன்)

வடக்கு மாகாண சபையில் தற்போது ஏற்பட்டுள்ள அமைச்சரவை தொடர்பான பிரச்சினையாது சபையை கலைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளனர்.

இன்று இடம்பெற்ற வட மகாண சபையின் அமர்வின் இறுதியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாணசபை சார்ந்து அமைச்சரவை செயற்பாட்டில் இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. அவ்வாறு அமைச்சரவை செயற்பட்டால் அதனை கூட்ட வேண்டிய பொறுப்பு பிரதம செயலாளருக்கு உண்டு. இவ்வாறான நிலையில் அவ்வாறு கூட்டுகின்ற நிலமை பிரதம செயலாளருக்கு தற்போது இல்லை என்றே கருதுகின்றேன்.

ஏனெனில் இப் பிரச்சனை தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் முதலமைச்சர் அனுப்பிய கடிதத்தில் அடிப்படையாக பார்க்கின்ற போது அத்தகைய முழுமையான அமைச்சரவை இல்லை என்றே தெரிகின்றது.

1977ஆம் ஆண்டு மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தின் 27ஆம் இலக்க பிரிவு 5 வினை அமுலாக்கம் செய்கின்ற அச்சம் இருக்கின்றது. அதாவது மாகாண சபை அரசியலமைப்பில் இருந்து பிறழ்வாக செயற்பட்டால் அதனை நீக்கம் அதிகாரம் உள்ளது.

இது எங்கேயோ ஒர் கை தெரிந்தோ தெரியாமலோ இச் சபையை இக் கட்டான ஒர் நிலைக்கு தள்ளி அதனூடாக இச் சபையை கலைக்கின்ற நிலைக்கு கொண்டு வர முயற்சிக்கின்றனரா என்ற சந்தேகம் எழுகின்றது என்றார்.