தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் திடீரென இன்று பணியாளர்களை வரவழைத்து வருகையை பதிவு செய்திருப்பது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். 

இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு  மூடியது. கடந்த 45 நாட்களாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ள நிலையில் இந்த ஆலையை மீண்டும் திறந்துவிட வேண்டும் என்பதில் ஸ்டெர்லைட் நிர்வாகம் தீவிரமாக இருந்து வருகிறது.

 ஆனால் தமிழக அரசோ ஒருபோதும் ஸ்டெர்லைட் ஆலையை இயங்க அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக கூறியுள்ளது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் பணியாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தது. 

இந்நிவையில் இன்று திங்கள்கிழமை அனைவரும் ஸ்டெர்லைட் ஊழியர்கள் குடியிருப்பான தாமிரா பிரிவு 1, பிரிவு 2 ஆகியவற்றுக்கு வந்து வருகையை பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. 

இதையடுத்து ஏராளமான ஸ்டெர்லைட் ஆலை பணியாளர்கள் வாகனங்களில் அழைத்துவரப்பட்டு வருகை பதிவு செய்யப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ள நிலையில் அந்த நிர்வாகம் திடீரென பணியாளர்களை அழைத்தது தூத்துக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.