உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் குரோசியாவை வீழ்த்தி உலகக்கிண்ணத்தை  சுவீகரித்த பிரான்ஸ் அணிக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. 

உலகக்கிண்ணத் கால்பந்து திருவிழா ரஷ்யாவில் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் நே்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. 

இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி உலகக்கிண்ணத்தை கடந்த 20 வருடங்களின் பின்னர் 2 ஆவது தடவையாக கைப்பற்றியது.

உலக்கிண்ணத்தை சுவீகரித்த பிரான்ஸ் அணிக்கு பரிசுத்தொகையாக 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளது. இரண்டாவது இடம் பிடித்துள்ள குரோசியா அணிக்கு 28 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசாக கிடைத்துள்ளது.

இதேவேளை, பிரான்ஸ் அணி இம்முறை பங்கேற்ற லீக் போட்டிகளில் எந்த அணியிடமும் தோல்வி அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 17 ஆவது இடத்திலிருந்து 32 ஆவது இடங்களை பிடித்துள்ள அணிகளுக்கு 8 மில்லியன் அமெரிக்க டொலர்களும் 9 ஆவது இடத்திலிருந்து 16 ஆவது இடங்களைப் பிடித்த அணிகளுக்கு 12 மில்லியன் அமெரிக்க டொலர்களும் 5 ஆவது இடத்திலிருந்து 8 ஆவது இடங்களை பிடித்த அணிகளுக்கு 16 மில்லியன் அமெரிக்க டொலர்களும் நான்காவது இடத்தை பிடித்த அணிக்கு 22 மில்லியன் அமெரிக்க டொலர்களும் 3 ஆவது இடத்தைப் பிடித்த அணிக்கு 24 மில்லியன் அமெரிக்க டொலர்களும் பரிசாக வழங்கப்பட்டுள்ளன.

இம் முறை உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண போட்டிக்கு ஒதுக்கப்பட்ட தொகையைவிட 40 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு 791 மில்லியன் அமெரிக்க டொலர்களை பிபா வழங்குவதாக அறிவித்திருந்தது.  

இந்த மொத்த தொகையில் பரிசுத் தொகையாக 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த உலகக்கிண்ண போட்டியுடன் ஒப்பிடும் போது 12 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

உலகக்கிண்ண கால்பந்து வரலாற்றில் அதிக பணப்பரிசை வென்ற அணியாக பிரான்ஸ் அணி உள்ளமை குறிப்பிடத்தக்கது.