சுழற்பந்துவீச்சாளர்களை அடித்து ஆட முயன்றதே தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக நான் சிறப்பாக துடுப்பெடுத்தாடியதற்கு காரணம் என இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரட்ண தெரிவித்துள்ளார்.

சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு அனுமதித்தால் உங்களால் சிறப்பாக விளையாட முடியாத நிலையை அவர்கள் உருவாக்குவார்கள் என தெரிவித்துள்ள திமுத் கருணாரட்ண  இதன்காரணமாக கால்களை பயன்படுத்தி முன்னோக்கி சென்று அவர்களை அடித்து ஆட முயன்றதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக நான் ஓட்டங்களை பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க முயல்கின்றேன் எனவும் தெரிவித்துள்ள திமுத் நீங்கள் கால்களை பயன்படுத்தி நகர்ந்து சிறிது துணிச்சலுடன் ஆட முற்பட்டால் சுழற்பந்துவீச்சாளர்கள் தடுமாறுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் போது சிறந்த தடுப்பாட்டம் அவசியம் அதேவேளை அவர்கள் உங்களை ஆதிக்கம் செலுத்துவதற்கு முன்னர் நீங்கள் அவர்களை ஆதிக்கம் செய்யவேண்டும் எனவும் திமுத் தெரிவித்துள்ளார்.

நான் இன்னமும் முழுமையான துடுப்பாட்ட வீரனாக மாறவில்லை ஆனால் அதனை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.