மகாவலி கங்கையில் மணல் அகழ்வால் திருகோணமலை சேருவில மூதூர் போன்ற பிரதேச செயலக பிரிவில் உள்ள 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ளதாக அல்லை மாதிரி கிராம பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு நேரடியாக பாதிப்பக்குள்ளாகும் இடங்களை காண்பிக்கும் நிகழ்வும் ஊடகவியலாளர் கலந்துரையாடலும் இன்று இடம் பெற்றது. இதன்போது இந்த மணல் ஏற்றுமதியில் ஈடுபடும் பெண்கள் மற்றும் சில முதலாளிகளும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து அல்லை மாதிரி கிராம பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ஜே.பி.எம். துசார கருத்து தெரிவிக்கையில்,

மணல் ஏற்றுமதியில் ஈடுபடுவதற்காக அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களில் அநேகர் அரசாங்க உத்தியோகத்தில் உள்ளவர்களும் சிவில் பர்துகாப்பு பிரிவில் உள்ளவர்களும் ஆசிரியர்களுமாக காணப்படுகின்றனர்.அவர்களின் குடும்பத்திலுள்ள பெண்களே இவ்வாறான மணல் அனுமதிப்பத்திரத்தின் உரிமையாளராக காணப்படுகின்றனர்

மேலும் தெற்கில் உள்ள இவ்வாறான மணல் ஏற்ற வரும் டிப்பர் லொறிகள் மூலமாகவே போதைப் பொருள் திருகோணமலைக்கு வந்து சேர்கின்றது. எனவே இதனை உடனடியாக நிறுத்தி பிரதேசத்தின் ஜீவனோபாயமான விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என தெரிவித்தார்.