(இராஜதுரை ஹஷான்)

காணாமல்போனோர் அலுவலகத்தினர் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி காணாமல்போனோரின் உறவினர்களை தொடர்ந்தும் ஏமாற்ற வேண்டாம் என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

காணாமல்போனோர் அலுவலகம் கடந்த காலங்களில் பலரது எதிர்ப்புக்களின் மத்தியில்  ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால் இதுவரை காலமும் எவ்வித  அரசியல் தலையீடுகளுமின்றி சுயாதீனமாகவே செயற்பட்டு வருகின்றது. அத்துடன் இதுரை எவ்வித திருப்திகரமான தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாகவே பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த அலுவலகத்தை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனர்.

தற்போது தேசிய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகம் முற்றிலும் மாறுப்பட்டதாகவே காணப்படுகின்றது.  அதவாது மேற்குலக அழுத்தங்களின்  காரணமாகவே  குறித்த ஆணைக்கழு  நியமிக்கப்பட்டுள்ளது. இது  ஏனைய ஆணைக்குழுக்களை விட அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே காணாமல்போனோர் அலுவலகத்தினர்  பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உறவுகளின் உண்ர்வுகளை கேலிக்கூத்தாக்க வேண்டாம். பாதிக்கப்பட்ட மக்கள் நியாயங்களை வேண்டி நிற்பது  ஏற்றுக் கொள்ள கூடியது. எனவே பொய்யான வாக்குறுதிகளை குறிப்பிட்டு காணாமல்போனோரின் உறவினர்களை தொடர்ந்தும் ஏமாற்ற வேண்டாம் என்றார்.