(க.கிஷாந்தன்)

டிலான் பெரேராவுக்கு மூளையில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அவர் அங்கொடை மனநோயாளி வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டும் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினூடாக பெருந்தோட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தோட்ட தொழிலாளர்கள் தொடர்பில் இரண்டு வருடங்களுக்கு முன் செய்துக் கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தை திகாம்பரம் தான் காட்டிக் கொடுத்தார் என தொழிலாளர் காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து என் மீது சேறு பூசுகின்றார்.

நான் ஒரு காலமும் தொழிலாளர்களை காட்டிக் கொடுக்க போவதில்லை. இம்முறை ஆயிரம் ரூபாய்க்கு மேலதிகமாக சம்பளத்தை பெற்றுக் கொடுப்பவர்கள் என்றால் அவர்களை மாலை இட்டு வரவேற்கும் அதேவேளை இம்முறையும் தொழிலாளர்களை காட்டிக் கொடுப்பார்கள் என்றால் தொழிலாளர் தேசிய சங்கம் அதன் அங்கத்தவர்களை இணைத்துக் கொண்டு வீதியில் இறங்கி போராடும்.

காட்டி கொடுத்ததை யார் என்று மக்கள் நன்கு அறிவார்கள். கடந்த கால கூட்டு ஒப்பந்தத்தின் போது 1000 ரூபாவை சம்பளமாக வாங்கி தருவதாக தம்பட்டம் அடித்தவர்கள் கடைசியில் காட்டிக்கொடுத்து விட்டு முழு பொறுப்பையும் என் மீது திணித்து விட்டார்கள்.

நான் உங்களின் ஒருவன் இந்தியாவிலிருந்து பிறந்து வரவில்லை. மடக்கும்புர தோட்ட லயத்தில் பிறந்து தொழிலாளியின் பிள்ளையாக அரசியல் செய்கின்றேன். நான் தொழிலாளர்களின் கஷ்ட, நஷ்டங்கள் நன்கு அறிந்தவன். ஒரு காலமும் தொழிலாளர்களை காட்டிக் கொடுத்தவன் அல்ல. என்னால் முடிந்ததை முழுமையாக செய்து முடிப்பேன் என்றார்.