(ரி.விரூஷன்)

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனுவினை தொடர்வதற்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு உதவி புரிந்த பெண் மீதும் அவரது மகன் மீது இனந்தெரியாதோர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த இந்த தாக்குதல் சம்பவமானது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் வட்டுக்கோட்டை சங்கரத்தைப் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண்ணும் அவரது 6 வயது மகனுமே தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண் நேற்யை தினம் தனது  மகனுடன் வட்டுக்கோட்டை, கொட்டைக்காடு  வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது 

இனம் தெரியாத கும்பல் ஒன்று அவரை வழி மறித்து இரும்புக் கம்பிகளால் தலையில் தாக்கியதுடன் அவரது மகன் மீதும் தாக்கிவிட்டு தப்பித்துச் சென்று விட்டனர்.

இதனைதனையடுத்து படுகாயமடைந்த இருவரையும் வீதியில் வந்தவர்கள் மீட்டு கொட்டைக்காடு ஆதார வைத்தியசாலையில் சேர்த்தனர். இதன் பின்னர் குறித்த பெண் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இது தொடர்பாக குறித்த பெண்ணின் உறவினர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யச் சென்றபோதும் வீதியால் செல்லும் போது தவறுதலாக வீழ்ந்தே அப்பெண் காயமடைந்ததாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்திருந்தனர். 

இதனையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலையில் வைத்தியசாலைப் பொலிஸாரே பெண்ணிடம் வாக்குமூல்களைப் பெற்று விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இதேவேளை குறித்த பெண்னே கடந்த 1996 ஆம் ஆண்டு நாவற்குழி இராணுவ முகாம் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆட்கொணவர்வு மனுவினை அவர்களது உறவினர்கள் தாக்கல் செய்வதற்கு உதவி புரிந்திருந்தார். அத்துடன் தொடர்ச்சியாக அவ் வழக்கினை நடத்திச் செல்லும் நடுத்தாரர் தரப்புச் சட்டத்தரணிகளுக்கு உதவிகளையும் வழங்கி வருகின்றார்.

கடந்த 10 ஆம் திகதி யாழ்.மேல்நீதிமன்றில் இடம்பெற்ற இவ் வழக்கு விசாரணையின் போது மனுதாரர்களுக்கு இராணுவ புலனாய்வாளர்கள் முறையற்ற அழுத்தங்களைப் பிரயோகிப்பதாகவும் வழக்கு நடவடிக்கையின்போது நீதிமன்றத்தில் இராணுவப் புலனாய்வாளர்கள் அதிகளவில் பிரசன்னமாகி அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதாகவும் மனுதாரர்கள் தரப்புச் சட்டத்தரணி குருபரன்  நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே தற்போது அவ் வழக்கிற்கு உதவி வரும் பெண்மீது இனம்தெரியாதேரால் தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.