கிளிநொச்சியில் காணாமல்போனோர் அலுவலகம் நடத்திய கலந்துரையாடலை புறக்கணித்த காணால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காணால்போனோர் அலுவலக அதிகாரிகள் முன்னிலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை நடத்தினர்.

அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட காணாமல்போனர் அலுவலக அதிகாரிகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெறவிருந்தது.

இதன்போதே குறித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அதிகாரிகளுடனான சந்திப்பினை புறக்கணித்து கூட்டுறவு சபை மண்டபத்திற்கு வெளியில் காணாமல்போனோரது புகைப்படங்களை கையில் ஏந்தியவாறும் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட, சரணடைந்த உறவுகளை மீட்டுத்துருமாறு கோரியும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

மேலும் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட இந்த அலுவலகமானது எந்த எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை என்றும் அதனால் காணாமல்போனோர் அலுவலகத்தை முற்றாக புறக்கணிப்பதாகவும் அதிகாரிகள் முன்னிலையில் வெளிப்படையாக தெரிவித்தனர்.

அத்துடன் இவர்களது நடவடிக்கையினால் கடமையை மேற்கொள்ள  முடியாத அலுவலக அதிகாரிகள் பொலிஸாரின் உதவியை நாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.