மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் நீராடச் சென்ற சிறுவனொருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. 

நல்லதண்ணி கிரீட்டன் தோட்டத்தில் உறவினர் வீட்டிற்கு வந்த குறித்த சிறுவன் பிற்பகல் வேளையில் தனியாக நீராடச் சென்றவேளையில்  நீராடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென காணாமல் போயுள்ளதாக அப்பிரதேசத்தில் இருந்த பிரதேசவாசிகள் நல்லதண்ணி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

அதன் பின் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் நீர்தேக்கத்தில் காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் ஈடுப்பட்டு சுமார் 2 மணித்தியாலயங்களின் பின் சடலத்தை நீர்தேக்கத்திலிருந்து மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் நுவரெலியா கந்தப்பளை கோட்ஹில் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய ஜே. நரேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.