பிறந்து 15 நாட்களேயான குழந்தையை பணத்திற்காக விற்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் றாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேலியகொட பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிறந்து 15 நாட்களுடைய அந்த குழந்தையை 02 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டமை பொலிஸாரின் ஆரமபக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குழந்தையின் 20 வயதான தாய் றாகம பிரதேசத்தில் வீட்டு வேலைக்காக வந்திருந்ந நிலையிலேயெ குறித்த குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் குறித்த குழந்தையின் தாய், பாட்டி, தாத்தா மற்றும் தரகர் பெண் ஆகியேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் றாகம மற்றும் மஸ்கெலிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதுடன், அவர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர். 

குறித்த சமபவம் தொடர்பில் றாகம பொலிஸாரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை றாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.