(நா.தனுஜா)

முதலாவது ஊழல் விசாரணை சிறப்பு நீதிமன்றம் இவ்வாரத்திலிருந்து செயற்படும் எனவும், அதற்கென இலங்கை சட்டக்கல்லூரிக்கு எதிரே நிர்மாணிக்கப்பட்டுள்ள ஊழல் விசாரணை சிறப்பு நீதிமன்றக் கட்டடம் நேற்று இலங்கை கடற்படையினரால் நீதியமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் அஜித் பீ பெரேரா   தெரிவித்தார். 

அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஊழல் விசாரணைக்கான முதலாவது சிறப்பு நீதிமன்றத்தின் பணிகள் இவ்வாரமளவில் ஆரம்பிக்கப்படும். அதே போன்று மேலும் இரு ஊழல் விசாரணை நீதிமன்றங்களை அண்மைய காலத்தில் அமைக்கப்படும். 

தற்போது குற்றச்செயல்கள் கடுமையாக அதிகரித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. 

ஆனால் கொலை, வன்புணர்வு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் கடந்த அரசாங்க காலத்தை விட தற்போது வெகுவாக குறைவடைந்துள்ளன. அத்தோடு அவ்வாறான குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தண்டனை வழங்கும் வீதமும் கடந்த அரசாங்க காலத்தோடு ஒப்பிடுகையில் தற்போது அதிகரித்துள்ளது. 

கொலைச் சம்பவங்கள் தொடர்பில் 2010ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நோக்குகையில் முறையே 741, 724, 646, 586, 548, 476, 502, 452 ஆக இருந்துவந்துள்ளது. இக்குற்றங்கள் தொடர்பில் தண்டனை வழங்கப்பட்டுள்ள வீதங்கள் முறையே 86.7, 78.2, 85.3, 89.2, 87, 90.7, 92.8, 93 சதவீதமாக உள்ளது. 

அதேபோல் 2010ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற வன்புணர்வு சம்பவங்களின் எண்ணிக்கை முறையே 1765, 1775, 2212, 2181, 2008, 2033, 1996, 1732 ஆகவும், அவற்றுக்கு தண்டனை வழங்கப்பட்ட வீதங்கள் முறையே 93, 87.3, 93.5, 93.6, 95.2, 95.2, 94.5, 96.2 ஆகவும் உள்ளது என்றார். 

அவரிடம் போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடையோருக்கு மரணதண்டனை வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வினவிய போது, 

போதைப்பொருள் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு மரணதண்டனை பொருத்தமான தீர்வாக அமையும் என நான் கருதவில்லை. ஆனால் அமெரிக்கா, ஜப்பான் போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளில் மரணதண்டனை நடைமுறையிலுள்ளது. இது பொருத்தமான தீர்வு என ஜனாதிபதி கருதுவாராயின் எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றார்.