2016 ஜனாதிபதி தேர்தலின் போது ஜனநாயக கட்சியின் கணணி வலையமைப்பிற்குள் ஊருடுவியதாக ரஸ்யாவின் புலனாய்வாளர்கள் 12 பேர் மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

ரஸ்யாவின் புலனாய்வாளர்கள் 12 பேர் கணணி வலையமைப்பிற்குள் ஊருடுவது மற்றும் தேர்தல் அலுவல்களுடன் தொடர்புபட்ட அமைப்புகளின் கணணிகளிற்குள் ஊருடுவது ஆகிய முயற்சிகளில்  ஈடுபட்டனர் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ரஸ்யா மிகவும் துல்லியமாக தனது நடவடிக்கைகளை முன்னெடுத்தது,ஜனநாயக கட்சியின் முக்கியமான கணணிகளை அவர்களால் இலக்கு வைக்க முடிந்தது  எனவும் அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் அவர்கள் ஜனநாயக கட்சியின் கணணிகளில்  ஹிலாரி டிரம்ப் போன்ற வார்த்தைகளை தேடினர் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ரஸ்யர்கள் தங்கள் நடவடிக்கைகளிற்காக போலி மின்னஞ்சல்களை  பயன்படுத்தினர் மற்றும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் .

ரஸ்யாவின் ஹக்கர்கள் அமெரிக்க தேர்தல் அலுவலகங்களின் கணணிகளிற்குள் ஊருடுவி சுமார் ஐந்து இலட்சம் வாக்காளர்களின் விபரங்களை திருடினர் எனவும் அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எனினும் 2016 தேர்தல் முடிவுகளில் மாற்றங்களை  செய்யும் முயற்சிகள் இடம்பெற்றன என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஸ்யாவின் முக்கிய புலானய்வு  பிரிவான ஜிஆர்யு என்ற அமைப்பினை சேர்ந்தவர்களே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர் என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.