போதைப்பொருள் குற்றங்களில் தொடர்ந்தும் ஈடுபடும்  ஏற்கனவே மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களிற்கு மரண தண்டனையை நிறைவேற்றும் யோசனையை நிதியமைச்சர் மங்கள சமரவீர கடுமையாக எதிர்த்துள்ளார்.

இலங்கை சிறைகளில் பணியாற்றும் ஊழல் அதிகாரிகளிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அவர்  சட்டத்தின் ஆட்சியை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலமே இந்த பிரச்சினைக்கு தீர்வை காணலாம் என குறிப்பிட்டுள்ளார்.

மரணதண்டனையை நிறைவேற்றுவதை நான் எதிர்க்கின்றேன் என தெரிவித்துள்ள அமைச்சர் நாடொன்றில் குற்றங்களை குறைப்பதற்கு இது சிறந்த வழிமுறையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மரணதண்டனையை நிறைவேற்றுவதன் மூலம்  குற்றங்களை குறைக்க முடியாது என்பதற்கு உலகம் முழுவதிலும்  ஆதாரங்கள் உள்ளன குறிப்பாக அமெரிக்காவின் அனுபவம் அவ்வாறானதாக உள்ளது எனவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள முக்கிய குற்றவாளிகளிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிறைகளில் உள்ளவர்கள் போதைப்பொருள் வர்த்தகநடவடிக்கையின் முக்கிய புள்ளிகள் இல்லை அவர்கள் போதைப்பொருட்களை விற்பவர்கள் அல்லது இரண்டாம்தரத்தில் உள்ளவர்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முக்கிய புள்ளிகள் மத அமைப்புகள் தொண்டர் நிறுவனங்கள் சமூக அமைப்புகளின் பின்னால் மறைந்துள்ளனர் அவர்களை கைதுசெய்வதற்கான முறையொன்று அவசியம் எனவும் நிதியமைச்சர்  தெரிவித்துள்ளார்.