ரஷ்யாவில் நடைபெற்றுவரும் 2018 பிபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் நாளை நடைபெறவுள்ள உலக சம்பியனைத் தீர்மானிக்கும் பிரான்ஸுக்கும் குரோஷியாவுக்கும் இடையிலான இறுதிப் போட்டியுடன் நிறைவுக்கு வரவுள்ளது.

அதற்கு முன்பதாக மூன்றாம் இடத்தை அல்லது வெண்கலப் பதக்கத்தை வெல்லப்போகும் அணியைத் தீர்மானிக்கும் பெல்ஜியத்துக்கும் இங்கிலாந்துக்கும்  இடையிலான போட்டி செய்ன்ட் பீட்டர்ஸ்பேர்க் விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை இரவு நடைபெறவுள்ளது.

இப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் 32 வருடங்களுக்குப் பின்னர் பெல்ஜியமும் 52 வருடங்களுக்குப் பின்னர் இங்கிலாந்தும் அதி சிறந்த பெறுதியைப் பெறும் குறிக்கோளுடன் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளது. 

இப் போட்டி இரண்டு அணிகளிலும் இடம்பெறும் வீரர்கள் தங்களைத் தயார்செய்வதற்கு மிகவும் கடினமான நிலையைத் தோற்றுவிக்கப் போகின்றது.

விளையாட்டுத்துறையில் உயரிய விருதை வெல்லக்கூடிய வாயிலை அண்மித்தபோதிலும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலைக்குத் தள்ளப்பட்ட பெல்ஜியமும் இங்கிலாந்தும் தத்தமது உலகக் கிண்ண வரலாறுகளில் பல்லாண்டுகளுக்குப் பின்னர் சிறந்த பெறுதிக்காக போராடவுள்ளன.

இவ் வருட உலகக் கிண்ணப் போட்டிகளின் பல்வேறு கட்டங்களில் எந்த அணியையும் வெற்றிக்கொள்ளக்கூடிய ஒரு சிறந்த அணியாக விளங்கிய பெல்ஜியம், அரை இறுதியில் பல கோல் போடும் வாய்ப்புகளைக் கோட்டைவிட்டு உலகக் கால்பந்தாட்டத்தின் உயிரிய பரிசுக்கு போட்டியிடும் வாய்ப்பை இழந்தது..

இதனை அடுத்து மெக்சிகோ 1986 அத்தியாயத்தில் பிரான்ஸிடம் மேலதிக நேரத்தில் தோல்வி அடைந்து நான்காம் இடத்தைப் பெற்ற பெல்ஜியம் இம்முறை ஒரு படி முன்னேற எதிர்பார்த்துள்ளது.

மறுபுறத்தில் 1966 இல் தனது சொந்த மண்ணில் உலக சம்பியனான இங்கிலாந்து அரை நூற்றாண்டுக்குப் பின்னர் சிறந்த பெறுதியைப் பதிவு செய்யும் எண்ணத்துடன் இன்றைய போட்டியை எதிர்கொள்கின்றது.

பெல்ஜியம் அணியில் மூத்த வீரர்கள் இடம்பெறும் அதேவேளை இங்கிலாந்து இளம் வீரர்களில் பெரிதும் நம்பியுள்ளது.+

இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஜீ குழுவுக்கான கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்தை வெற்றிகொண்ட பெல்ஜியம் அணியில் ஆங்கிலேய கால்பந்தாட்ட தொடர்புடைய பலர் இடம்பெறுவது அவ்வணிக்கு மீண்டும் அனுகூலமான முடிவு கிடைக்கலாம் என கருதப்படுகின்றது. கடந்த 82 வருடங்களில் இங்கிலாந்தை முதல் தடவையாக பெல்ஜியம் வெற்றிகொண்டது.

ஆனால் லீக் சுற்றில் அடைந்த தோல்வியை நிவர்த்தி செய்யும் குறிக்கோளுடன் இங்கிலாந்து இன்று களம் இறங்கவுள்ளது.

அணிகள் 

பெல்ஜியம்: திபோட் கோர்ட்டொய்ஸ், ஜேன் வேர்டொஞ்சென், வின்சன்ட் கொம்ப்பனி, டொபி ஆல்டர்வெய்ல்ட், அக்செல் விட்செல், கெவின் டி ப்றயன், நாசர் செட்லி, தோமஸ் மியூனியர், மெரௌன் பெல்லானி, ஈடன் ஹஸார்ட் (அணித் தலைவர்), ரொமேலு லூக்காக்கு.

இங்கிலாந்து: ஜோர்டான் பிக்போர்ட், கய்ல் வோக்கர், ஜோன் ஸ்டோன்ஸ், ஹெரி மெகயர், ட்ரென்ட் அலெக்ஸாண்டர் ஆர்னல்ட், ரூபென் லொவ்டஸ் சீக், எரிக் டயர், ஜெசே லிங்கார்ட், ஏஷ்லி யங், ரஹீம் ஸ்டேர்லிங், ஹெரி கேன் (அணித் தலைவர்).