(எம்.எம்.மின்ஹாஜ்)

தாய்லாந்து முதலீட்டாளர்களுக்காக இலங்கையில் முதலீட்டு மற்றும் கைத்தொழில் வலயமொன்றை உருவாக்குவதற்கும் இரு நாடுகளுக்கிடையில் சுற்றுலாதுறை ஊக்குவிப்பதற்கும் தாய்லாந்து பிரதமர் பிரயத் சன் ஒசாவுககும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தாய்லாந்து பிரதமர் பிரயத் சன் ஒ சா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் வைத்து சந்தித்தார். 

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார, கலாசார மற்றும் சமூக உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் கருத்துகளும் பரிமாறப்பட்டன. மேலும் இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக இலங்கை மாற்றியமைப்பது குறித்து இரு நாடுகளின் பிரதமருக்கு இடையில் கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளன. 

இந்த சந்திப்பில் தாய்லாந்து பிரதமரின் பாரியார் அர்பரோன் சன் ஒ சா, தாய்லாந்து வர்த்தக துறை பிரதி அமைச்சர் சுதிமா புன்யபிரபசரா உட்பட தாய்லாந்து பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர். இலங்கை சார்பாக பிரதமரின் பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க, அமைச்சர்களான திலக் மாரப்பன, மலிக் சமரவிக்கிரம, ரவிந்திர சமரவீர ஆகியோர் கலந்து கொண்டனர்.