தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அப்பலோ வைத்தியாசாலையின் வைத்தியரும் தாதியும் முரணான தகவல்களை வழங்கியுள்ளதை தொடர்ந்து இது குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஆறுமுகசாமி ஆணையம்  தீர்மானித்துள்ளது.

ஆணையத்தின் முன் வாக்குமூலம் அளித்துள்ள அப்பலோ வைத்தியசாலை தாதி ஹெலனா டிசம்பர் நான்காம் திகதிக்கு பின்னர் ஜெயலலிதா எந்த உணவும் உட்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

இதேவேளை சில நாட்களிற்கு முன்னர் சாட்சியமளித்த வைத்தியர் ரமா ஜெயலலிதா 4 ஆம் திகதி உணவுண்டார் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜெயலலிதாவிற்கு டிசம்பர் 2ஆம் 3ஆம் திகதிகளில் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டதாக செவிலியர்களின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் செவிலியர் ஹெலனாவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.எனினும் வைத்தியர்கள் இது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை. அன்றைய நாட்களில் ஜெயலலிதாவின் உடல்நிலை நல்ல நிலையில் இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று ஜெயலலிதா இனிப்பு பண்டங்கள் உட்கொண்ட விடயத்திலும் அப்பலோ வைத்தியர்களும் பணியாளர்களும் முரணான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இதன் காரணமாக இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள  ஆறுமுகசாமி ஆணையம் தீர்மானித்துள்ளது.