சட்ட விரோதமான முறையில் வெளிநாட்டு நாணய தாள்களை மறைத்து  இலங்கைக்கு கடத்திவர முயன்ற இந்திய பிரஜை ஒருவரும் மற்றும் இரு இலங்கை பிரஜைகளும்  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து  சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த நபர்கள் இன்று அதிகாலை 2 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு UL 306 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்து  போது குறித்த நபர்களிடமிருந்து சுங்க அதிகாரிகள்  நாணய தாள்களை கைப்பற்றியுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரிவித்தாவது,

கைது செய்யப்பட்ட இந்தியர் 40 வயதுடையவர் எனவும் இலங்கையர்கள் இருவரும் 40 மற்றும் 45 வயதுடையவர்கள் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது அவர்களிடமிருந்து சுமார்  48 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு  நாணய தாள்களை வைத்திருந்ததாக சுங்க ஊடக செய்தித் தொடர்பாளர்  தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட வௌிநாட்டு நாணயங்களில் 153,250 யூரோ, 52,950 அமெரிக்க டொலர்கள், 264,000 சவூதி ரியால், 18,500 கட்டார் ரியால் என்பவ அடங்குவதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கைதுசெய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுவருவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.