ஹட்டனில் ஹெரோயின் போதை பொருளுடன் நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றில் நபர் ஒருவரை சோதனை செய்த போது குறித்த நபரிடமிருந்து ஆறு சிறிய பக்கட் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மிகவும் சூட்சபமான முறையில் உடம்பில் மறைத்து வைத்து கொண்டு வந்த போது ஹட்டன் மல்லியப்பு சந்தியில் மேற்படி பஸ்ஸினை சோதனையிட்டபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஹெரோயின் பக்கட்டுக்கள் கொட்டகலை பிரதேசத்திற்கு கொண்டு செல்வதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை பத்தனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் ஹெரோயின் பக்கட்கள் இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.