(ரி.விரூஷன்)

வடக்கில் இடம்­பெறும் வன்­முறைச் சம்­ப­வங்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு பொலி­ஸா­ருக்கு பொதுமக்கள் பூரண ஆத­ரவு வழங்க வேண்டும்.   அது தொடர்­பான தக­வல்­களை மக்கள் தெரி­விக்க வேண்டும் என்று சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார தெரி­வித்தார்.  

வடக்கில் அதி­க­ரித்­துள்ள வன்­முறை சம்­ப­வங்கள் தொடர்பில் ஆராய்­வ­தற்­காக நேற்றைய தினம் சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார பிரதி அமைச்சர் நளின் பண்­டார  மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்த நிலையில் அங்கு அவர்கள்  நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டனர்.  

செய்­தி­யாளர் சந்­திப்பில் அமைச்சர் ரஞ்ஜித் மத்­தும பண்­டார கருத்து தெரி­விக்­கையில்,

முப்­ப­தாண்­டு­கால யுத்தம் நிறை­வ­டைந்த பின்னர் வடக்கில் அநே­க­மான அபி­வி­ருத்­திகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. தற்­போது மக்கள் அமை­தி­யா­கவும் சமா­தா­ன­மா­கவும் இருக்­கின்­றார்கள். மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற அபி­வி­ருத்­தி­களில் மென்­மேலும் விருத்­தி­ய­டைந்து வரு­வ­துடன் பொரு­ளா­தா­ரத்­திலும் முன்­னேற்றம் காணப்­ப­டு­கின்­றது.

பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு, சட்ட மற்றும் ஒழுங்கை நிலை­நாட்­டு­மாறு நான் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தேன். அத்­துடன் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களும் சரி­யான சேவையை செய்­கின்­றார்கள் என நான் கூறிக் ­கொள்­கின்றேன்.

அரச நிர்­வாக முகா­மைத்­துவ மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சர் என்ற வகையில் சில­வற்றை கூற வேண்­டி­யுள்­ளது. அரச முகா­மைத்­துவ ஆட்­சேர்ப்பின் போது 131 பேரினை உள்­வாங்­கி­யி­ருந்தோம். ஆனால் அதில் வடக்­கி­லி­ருந்து 31 பேர் மாத்­தி­ரமே வந்­தி­ருந்­தார்கள்.

அதே­போன்று பொறி­யி­ய­லா­ளர்கள், கணக்­கா­ளர்கள் போன்ற துறை­க­ளிலும் இங்­கி­ருந்து வரு­வோ­ரது எண்­ணிக்கை குறை­வா­கவே உள்­ளது. இலங்­கையர் என்ற ரீதியில் எல்­லோ­ருக்கும் சம­னா­கவே சந்­தர்ப்­பங்­களை வழங்­கி­வ­ரு­கின்றோம்.

தற்­போது வடக்கு, கிழக்கில் 1500 சமுர்த்தி உத்­தி­யோ­கத்­தர்கள் இணைக்­கப்­பட்­டுள்­ளனர். எதிர்காலத்தில் பட்­ட­தா­ரி­க­ளுக்கும் தொழில் வாய்ப்­பு­களை வழங்­க­வுள்ளோம். இவை தவிர கிராம மட்­டத்தில் வளர்ச்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக அதற்­கான வேலைத் திட்­டத்தை கொண்டு வந்­துள்ளோம்  என்றார். 

இதனை தொடர்ந்து செய்­தி­யா­ளர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் பதி­ல­ளித்­தி­ருந்­தனர்.

கேள்வி: பொலி­ஸா­ருடன் தற்­போது இடம்­ பெற்ற கலந்­து­ரை­யாடல் தொடர்­பாக கூறுங் கள்?

பதில்: ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகியோர், வடக்கில் இடம்­பெறும் வன்­முறைச் சம்­ப­வங்கள் தொடர்­பாக நேரில் சென்று ஆராய்ந்து நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு எனக்கு ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்­தார்கள்.  அந்­த­வ­கையில் அது தொடர்­பாக பொலி­ஸா­ருடன் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தேன்.

இங்கு சட்ட மற்றும் ஒழுங்­கினை நிலை­நாட்டும் வகையில் செயற்­ப­டு­மாறு பொலி­ஸா­ருக்கு நான் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந் தேன்.

கேள்வி: யாழ்ப்­பா­ணத்தில் அண்­மைக்­கா­ல­மாக வன்­முறைச் சம்­ப­வங்கள் அதி­க­ரித்­துள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்­துள்­ளதே ?

பதில்: இங்கே இடம்­பெ­று­கின்ற வாள்­வெட்டுச் சம்­ப­வங்கள், பாலியல் துன்­பு­றுத் தல் சம்­ப­வங்கள் தொடர்­பாக சந்­தே­க­ந­பர்­களை கைது செய்­துள்ளோம். அவர்­களை நீதி­மன்றில் முற்­ப­டுத்­தி­யுள்ளோம்.  விசேட­மாக இது போன்ற சம்­ப­வங்கள் இடம்­பெ­று­கின்ற போது பொது மக்கள் அது தொடர்­பான தக­வல்­களை வழங்க வேண் டும். அத­னூ­டா­கவும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள முடியும்.

கேள்வி :   வன்­முறைச் சம்­ப­வங்கள் தொடர்­பாக சந்­தே­க­ந­பர்கள் கைது செய்­யப்­பட்­ட­தாக கூறும் நிலையில்   முக்­கி­ய­மா­ன­வர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னரா ?

பதில்: இது தொடர்­பாக பொலிஸ்மா அதிபர் பதில் வழங்­குவார்.

கேள்வி:   வன்­முறைச் சம்­ப­வங்கள் காலத்­திற்கு காலம் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரும் நிலையில் ஏன் அதனை முழு­மை­யாக கட்­டு­ப்ப­டுத்த முடி­ய­வில்லை.

பதில்: இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெறும் போது அது தொடர்­பாக முன்­னு­ரிமை கொடுத்து விசா­ரணை செய்ய வேண்டும்.  அதேநேரம் பொதுமக்­களும் இது தொடர்­பான தக­வல்­களை வழங்க வேண்டும். தற்­போது இது தொடர்­பாக ஆரா­யப்­பட்­டுள்­ளது. அத­னூ­டாக நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும். 

கேள்வி: புதி­தாக சட்ட ஒழுங்கு அமைச்­ச­ராக பத­வி­யேற்ற நிலையில் முதல் தட­வை­ யாக வடக்­கிற்கு வந்­துள்­ளீர்கள். இந்­நி­லை யில் இங்­குள்ள நிலை­மைகள் தொடர்­பாக ஏன் அர­சியல் தலை­மை­க­ளு­டனோ பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டனோ  பேச­வில்லை?

பதில்: முத­லா­வ­தாக பொலி­ஸா­ருடன் கலந்­து­ரை­யா­டலை மேற்­கொண்­டி­ருக்­கின்றோம். இதனை தொடர்ந்து மாலை ஆளுநர் அலு­வ­ல­கத்தில் வட­மா­காண ஆளுநர், மாவட்ட அரச அதிபர், யாழ்.மாந­கர மேயர் ஆகி­யோரை சந்­திக்­க­வுள்ளேன். வட­மா­காண முத­ல­மைச்சர்    இங்கு இல்லை.

கேள்வி: வடக்கில் போதைப்பொருள் பாவனை அதி­க­ரித்­துள்ள நிலையில் அதனை கடத்­து­வதில் ஈடு­ப­டு­ப­வர்­களை ஏன் கைது செய்­ய­வில்லை?

பதில்: போதை­வஸ்து தொடர்பில் பல கைதுகள் இடம்­பெ­று­கின்­றன. உதா­ர­ண­மாக அண்­மையில் கூட  அதி­க­ளவு பெறு­ம­தி­யான போதை பொருட்கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

போதைப்பொருளை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக விசேட பொலிஸ் குழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­துடன் விசேட சுற்­றி­வ­ளைப்பு தேடு­தல்­க­ளையும் மேற்­கொள்­ள­வுள்ளோம். இவை தவிர போதைப்பொருள் தொடர்­பான கைது நட­வ­டிக்­கையின் போது அத­னோடு சந்­தே­க­ந­பர்­க­ளுமே கைது செய்­யப்­ப­டு­கின்­றார்கள்.

கேள்வி: இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்த சர்ச்­சைக்­கு­ரிய விடு­தலைப் புலி­களின் மீள் உரு­வாக்கம் தொடர்­பான கருத்து குறித்து  என்ன நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன ?

பதில்: விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்த கருத்து தொடர்­பாக தெற்­கிலும் வடக்­கிலும் ஆத­ர­வா­கவும் எதி­ரா­கவும்  செய்­தி­களை ஊட­கங்கள் வெளி­யிட்­டி­ருந்­தன. நாட்டில் உள்ள சட்­டத்தின் படி, அவ் உரை தொடர்­பாக புலன் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு அதன் கோவைகள் சட்­டமா அதி­ப­ருக்கு அனுப்பி வைக்­க­ப்படும். அதன் பின்னர் சட்­டமா அதி­ப­ரது ஆலோ­ச­னைக்கு அமை­வாக நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும்.

சட்ட ஒழுங்கு பிர­தி­ய­மைச்சர் நளின் பண்­டார கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கையில்,

கேள்வி : வடக்கில் இரா­ணு­வத்தின் இருப்பு அவ­சி­ய­மா­னதா?

பதில்: இரா­ணு­வத்தின் சேவை­யா­னது இன்­றி­ய­மை­யா­த­தாகும். இயற்கை அனர்த் தங்களின் போது இராணுவத்தின் தேவை அவசியமானதாகும். அதேபோன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் அதிகம் தேவைப்படு கின்றார்கள். இவர்கள் மக்களோடு இணைந்து மக்களுக்குரிய சேவைகளை செய்ய தேவை.

கேள்வி : இராணுவம் பொலிஸ் ஆகியோர் மக்களுக்கான சேவை செய்ய தேவை என கூறுகின்றீர்கள்.  ஆனால் விடுதலைப் புலி கள் இருந்தால் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறாது என மக்கள் ஏன் கூறுகின்றார்களே?

பதில் : அது பிழையான எண்ணமாகும். தென் பகுதியிலும் இது போன்ற வன்முறைச் சம்பவங்கள்  இடம்பெறுகின்றன. அங்கும் பாதாள உலக குழுவினர் இருக்கின்றார்கள். இவ்வாறான நிலையில் விடுதலைப் புலிகள் காலத்தில் இவ்வாறான வன்முறைச் சம்ப வங்கள் இடம்பெறவில்லை என மக்கள் கூறுவதானது அவர்களது அறியாமையினால் வெளியிடப்படும் விடயமாகும்.