முன்னாள் இராஐாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் விடயத்தில் சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுமென சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார். 

யாழில் அதிகரித்திருக்கும் குற்றச்செயல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக  யாழிற்கு வருகை தந்த சட்டம் ஒழங்கு அமைச்சர் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் யாழ் பொலிஸ் நிலையத்தில் சந்திப்பொன்றை நடத்திய அவர், அதனைத் தொடர்ந்து அங்கு ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடாத்தினார்.

அதன் போது முன்னாள் அமைச்சர் விஐயகலா யாழில் ஆற்றிய உரை தொடர்பில் பலத்த சர்ச்சைகள் ஏற்பட்டிருக்கின்ற நிலையில் அது குறித்தான விசாரணைகள் மற்றும் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேலும் அவர் தெரிவிக்கையில்;

விஐயகலா மகேஸ்வரன் ஆற்றிய உரை பல ஊடகங்களிலும் வெளிவந்திருக்கின்றன. அந்த உரைக்கு ஆதரவாகவும் அதே நேரம் எதிர்ப்பாகவும் வடக்கிலும் தெற்கிலும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஆகவே அவை தொடர்பில் விசாரணைகள் அல்லது நடவடிக்கைகள் என்பன தொடர்பில் சட்ட நடைமுறைகளின் அடிப்படையிலையே எங்களால் செயற்பட முடியும் 

இதற்கமைய சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அவை தொடர்பான அறிக்கையை அனுப்பியதன் பின்னரே இறுதி முடிவெடுப்போம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.