தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் குற்றச்செயல்கள் நடந்ததில்லை என்று கூறுவதானது அறியாமையினால் தான் என சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார யாழில் வைத்து தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்திற்கு  விஐயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர் குடாநாட்டில் அதிகரித்திருக்கும் குற்றச்செயல்கள் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன் பின்னர் ஊடகவியியலாளர் சந்திப்பொன்றையும் நடாத்தினார்.

இதன் போது வடக்கில் பெருமளவிலான இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். அதே நேரம் பெரும் எண்ணிக்கையான பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இவ்வாறான நிலையிலும் குற்றச்செயல்கள் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டு தான் வருகின்றன. 

இதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் இவ்வாறு குற்றச்செயல்கள் நடைபெறவில்லை என்று பலரும் கூறியும் வருகின்றனர். இவ்வாறு ஏன் புலிகளை உச்சரிக்கின்றனர் இதற்கு என்ன காரணம் அமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.. 

புலிகளின் காலத்தில் வாள்வெட்டுக்கள், கொள்ளைகள், துஸ்பிரயோகங்கள் இடம்பெறவில்லை எனக் கூறிக் கொண்டு போவது பிழையான விடயம். அவ்வாறு புலிகள் இருந்த காலத்தில் இது போன்ற குற்றச்செயல்கள் நடக்கவில்லை என்று சொல்வதை அறியாமையினால் சொல்வதாகவே நான் பார்க்கின்றேன். 

இங்கு குற்றச்செயல்கள் அதிகரித்திருந்தாலும் அதனைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுத் தான் வருகின்றன. பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பலரும் கைது செய்யப்பட்டு சட்டரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இருக்கின்றன. அதே போன்று தொடர்ந்தும் அத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவும் உள்ளது.

இதே வேளை வடக்கு மாகாணத்தில் பெலிஸார் இருக்கையில் இராணுவம் தேவையில்லை என்று கூறப்படுகிறது குறித்து பிரதி அமைச்சரிடம் ஊடகவியியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது இரானுவத்தினர் வடக்கில் தேவை என்றும் அவர்களின் சேவை வடக்கில் இன்றியமையாதது என்றும் குறிப்பிட்டுள்ளார்.