(இராஜதுரை ஹஷான்)

சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்து மரண தண்டனை விடயத்தில் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன ஒருபோதும் பின்வாங்கக் கூடாது என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் அத்தே கொலகொட ஞானசார தேரர் தெரிவித்தார்.

பொதுபலசேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது நாட்டின் பாரம்பரிய கலாசார சீர்கேட்டிற்கு போதைப்பொருள் பாவனையே பிரதான காரணமாகவுள்ளது. இதனால் எதிர்கால தலைமுறையினரது வாழ்க்கையும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.  

இந் நிலையில் பாரிய போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டு சிறையிலுள்ள கைதிகளுக்கு மரண தண்டனை வழங்கும் தீர்ப்பு ஆவணத்தில் ஜனாதிபதி கைசாத்திடுவதாக குறிப்பிட்டுள்ளமையானது வரவேற்க்கத்தக்க விடயமாகும்.

அந்தவகையில் 19 பேருக்கு மரண தண்டனை வழங்கும் விடயத்தில்  தேசிய அரசாங்கமும் ஜனாதிபதியும் ஒரு போதும் பின்வாங்க கூடாது. குறிப்பாக இவ்விடயத்திற்கு எதிராக சர்வதேச அமைப்புக்கள் தற்போது  அழுத்தங்களை பிரயோகிக்கும்  எமது நாட்டில் தோன்றியுள்ள பிரச்சினைகளுக்கு எமது நாட்டு மக்களின் எதிர்கால நலன் கருதி நாமே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். 

அத்துடன் பாதாள குழுவினரது தலைவர்களை சுட்டுக்கொல்வதால் மாத்திரம் பாதாள குழுவினை கட்டுப்படுத்த முடியாது ஒவ்வொரு பாதாள குழுவினரது பின்னணியிலும் ஒரு அரசியல்வாதியின் செல்வாக்கு நிச்சயம் காணப்படும். எனவே இவ் விடயத்தில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.